சென்னை,
டில்லியில் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில், முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கார்த்தி சிதம்பரம், நக்மா, குஷ்பு உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்களுடன் ஏராளமான தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த திருநாவுக்கரசர் பேசியதாவது:
“பிரதமர் மோடியைவிட ராகுல்காந்திதான் செல்வாக்கான தலைவர். நாட்டின் பெரிய கட்சியின் துணைத்தலைவர் அவரை வேண்டுமென்றே மத்திய பாஜக அரசு கைது செய்திருக்கிறது.
அரியானா மாநில முன்னாள் ராணுவ அதிகாரி, ஊதிய நிர்ணம் குறித்து நடைபெற்ற போராட்டத்தில், தற்கொலை செய்துகொண்டார். மருத்துவமனையிலே அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியை கேள்விப்பட்டு மட்டுமல்ல.. இறந்த வீரரின் குடும்பத்தினர் ராகுல் காந்தியை சந்திக்க வேண்டும் என விரும்பினர். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல ராகுல் சென்றார்.
தனி ஆளாகச் சென்றார். அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக. இது நேரு குடும்பத்தின் கலாச்சாரம். காங்கிரஸ் பண்பாடு. இதற்காக சென்ற ராகுலை கைது செய்திருக்கிறது பாஜக அரசு..
இதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது, “முட்டாள்த்தனமான பாஜக அரசு,” என்று பேசினார்.
இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.