சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளி யாகும் என எதிர்பார்த்த நிலையில், நாளை வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மெகா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கறது. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திருவள்ளூர், ஆரணி, தேனி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, கரூர், விருதுநகர், திருச்சி, கன்னியாகுமரி தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.   போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டு, நேர் காணல் நடைபெற்றது. அவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் குறித்து டில்லி தலைமை ஆய்வு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒப்புதல் பெற்றவுடன் நாளை வெளியாகும் என்று டில்லி காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.