சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை 2025-26 குறித்து  முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்பட அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதில் சிலர் வரவேற்பு தெரிவித்தும், சிலர் பட்ஜெட்டை விமர்சித்தும் தங்களது கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்ததி தொடங்கியது.  இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 30ந்தேதிவரை நடைபெற உள்ளது. இன்று பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.  நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது,  தங்கம் தென்னரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

தேர்தலுக்காக வெற்று அறிவிப்புகள், விளம்பர பட்ஜெட் –  எடப்பாடி பழனிச்சாமி

நிதிநிலை அறிக்கை அல்ல, நிதிச் சீரழிவு அறிக்கை – ஓபிஎஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கை –   செல்வபெருந்தகை

அனைத்து தரப்பினரும் வரவேற்கும் பட்ஜெட் – திருமாவளவன்

 ‘தமிழகத்தில் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.25 லட்சம் கடன்’  –  ராமதாஸ்

வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக அரசு  – அண்ணாமலை

“இருக்கைகளும் காலி… திமுக பட்ஜெட்டும் காலி!” – தவெக தலைவர் விஜய்

பன்முக வளர்ச்சி – ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ

சில எதிர்பார்ப்புகளும் தொடர்கிறது – முத்தரசன்

உறுதியான அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இல்லை – ஜி.கே.வாசன்

எடப்பாடி பழனிச்சாமி – அதிமுக

திமுகவின் பல்வேறு வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ரேஷனில் ஒரு கிலோ சக்கரை அதிகமாக வழங்கப்படும் என்ற திமுக வாக்குறுதி என்ன ஆனது? நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களே தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். ஒரு ஆண்டில் எப்படி 40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவது சாத்தியமா?கடந்த 4 ஆண்டுகளில் 50 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 100 நாள் வேலை திட்டத்திற்கு ஊதிய உயர்வு எங்கே? தேர்தலுக்காக வெற்று அறிவிப்புகள். விளம்பர பட்ஜெட்.

2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்புகளை நிரப்பவே முடியாது. நாளுக்கு நாளுக்கு கடன் அதிகரித்து கொண்டே செல்கிறது. நிர்வாகத் திறமையற்ற அரசு நடக்கிறது. மக்களின் கோபம், கொந்தளிப்பை குறைக்க முயற்சிக்கிறார்கள். அது நடக்காது.

ஓபிஎஸ் – முன்னாள் முதல்வர்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமர்பிக்கப்பட்டது நிதிநிலை அறிக்கை அல்ல, நிதிச் சீரழிவு அறிக்கை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு, முதியோர்களுக்கான உதவித் தொகை உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படாதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யாத அறிக்கையாக இந்த நிதிநிலை அறிக்கை விளங்குவதாக தெரிவித்துள்ள அவர், தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமர்பிக்கப்பட்டது நிதிநிலை அறிக்கை அல்ல, நிதிச் சீரழிவு அறிக்கை என விமர்சித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமர்பிக்கப்பட்டது நிதிநிலை அறிக்கை அல்ல, நிதிச் சீரழிவு அறிக்கை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

மூத்த தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடக்க உள்ளதால், 2026-ல் முழு அளவிலான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்ய முடியும். வெற்று விளம்பர திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுதான். வழக்கம்போல் வெற்று அறிவிப்புகள் மட்டுமே பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ளன. தொழிற்பூங்காக்கள், தொழிற் பயிற்சி நிலையங்கள், தொழிற்பேட்டைகள் என பட்ஜெட்டில் அறிவிப்பு மட்டும்தான் உள்ளது. ஆண்டுதோறும் பட்ஜெட்டில் அறிவித்தால் போதுமா? திட்டங்களை செயல்படுத்துவது எப்போது?

பல லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து விட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் 57 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகிறார். அதேசமயம் அடுத்த ஓராண்டில் 40 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறுகிறார். இதை எப்படி அவர் செய்யப்போகிறார்?

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய அதிமுக அரசு செயல்படுத்தி வந்த இந்த திட்டத்தை 4 ஆண்டு காலம் முடக்கி வைத்துவிட்டு ஆட்சி முடியும் நிலையில் மீண்டும் திட்டத்தை செயல்படுத்தப்போவதாக கூறுவது, புதிய இளம் வாக்காளர்களை கவர்வதற்கான கேலிக்கூத்தே தவிர, இதனை வேறு எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

மாநில சுயாட்சி பற்றி வாய்கிழிய பேசி வரும் திமுகவினர் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் இன்னும் பரவலாக்கப்பட வேண்டும் என்பது பற்றி ஏன் பேச மறுக்கின்றனர். தமிழில் கவர்ச்சியான பெயர் வைத்து பட்ஜெட்டில் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதுமா? எதையும் செயல்படுத்த வேண்டாமா?

ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவித்தீர்கள். அது இன்னமும் வெற்று அறிவிப்பாக இருக்கிறது. திட்டங்களுக்கு பெயர் சூட்டுவதில் வித்தகர்களான திமுகவினர், அதனை செயல்படுத்துவதில் ‘எத்தர்கள்’. கடந்த 4 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை? அதில் ஒன்று இரண்டாவது செயல்படுகிறதா என்பதை விளக்க வேண்டும்.

தேர்தலுக்கு முன்பு அள்ளி வீசிய வாக்குறுதிகளில், அறிவிக்கப்பட்ட ஒன்றிரெண்டு கூட வெற்று அறிவிப்புகளாகவே இருக்கிறது. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ஸ்டிக்கர் ஒட்டுவதில் பெயர் எடுத்த திமுகவினர் மற்றவர்கள் செய்த பணிகளில் தங்கள் ஸ்டிக்கரை ஒட்டி வருவது ஊர் அறிந்த ஒன்று. அதைத் தான் இப்போதும் செய்துள்ளனர்.

தமிழக அரசு பொருளாதார ஆய்வறிக்கை என்ற பெயரில் வெளியிட்ட அறிக்கை இதற்கு தகுந்த எடுத்துக்காட்டு. உலக அளவிலும், இந்திய அளவிலும் தமிழகம் எந்தநிலையில் இருக்கிறது என்பதை அந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது. பல ஆண்டுகளாகவே தமிழகம் பல மாநிலங்களுக்கும் முன்னோடியாகவே திகழ்ந்து வருகிறது. சமூக முன்னேற்றம், தொழில் மேம்பாடு பொருளாதார வளர்ச்சி, தனிநபர் வருமானம் என பல்வேறு குறியீடுகளிலும் பல்லாண்டுகளாக தமிழகம் குறிப்பிடத்தக்க இடத்தில் தான் இருந்து வருகிறது. இது ஒன்றும் புதிதல்ல.

தமிழகம் வளர்ச்சி அடைந்திருப்பது உண்மைதான். ஆனால், இந்த சாதனைக்கு சொந்தகாரர்கள் ஒவ்வொரு தமிழரும்தான். தமிழ்நாடும், தமிழரும் இதற்காக பெருமைப்பட முடியும். ராஜாஜி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலங்களில் உருவாக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்புகளை தமிழகம் என்றென்றும் மறக்க முடியாது. இதற்கு, இதுவரை தமிழகத்தில் பொறுப்பில் இருந்த அனைத்து அரசுகளின் பங்களிப்பும் உள்ளது.

ஆனால், இந்த ஸ்டிக்கர் ஒட்டும் திராவிட மாடல் அரசு இதற்கு எப்படி பெருமைப்பட முடியும். திமுக அரசு பதவியேற்ற 4 ஆண்டுகளில் செய்த சாதனை என்ன? இந்த நான்கு ஆண்டுகளில் இந்த சாதனை பட்டியல் வந்து விட்டதா? இதற்கு முன்பு பல ஆண்டுகள் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி செய்தபோதும் இதே சாதனைப் புள்ளிகள் இருந்ததே?

உண்மையில் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தின் பல சாதனைகள் கைநழுவிப் போய் கொண்டிருக்கிறது. பல்வேறு துறைகளில் உத்திரப் பிரதேசம், குஜராத், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் முந்திக் கொள்ளும் சூழல்தான் ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழக மக்களின் சாதனைகளையும் உழைப்பையும் திருடி திராவிட மாடல் என்று ஸ்டிக்கர் ஒட்டினால் அது உங்கள் சாதனையாகி விடுமா?

பல்வேறு திட்டங்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையான மறைந்த முதல்வர் கருணாநிதி பெயரை சூட்டினால் அது திமுகவின் வெற்றியாகி விடுமா? தமிழ்நாட்டின் வறுமை நிலை 1.64 % என்று பெருமைப்படுகிறீர்கள். ஆனால் கேரளாவில் இது 0.8 % ஆக இருக்கிறதே? தமிழகத்தின் இயற்கை வளங்களை சுரண்டி சொந்தக் கட்சியினர் கொள்ளையடிக்க விட்டு வேடிக்கை பார்ப்பது ஏன்? திமுகவினர் நடத்தும் மதுபான ஆலைகளில் இருந்து மதுவை வாங்கி, அரசு மதுக் கடைகளை நடத்தி, அதன் மூலம் திமுகவைச் சேர்ந்த ஒரு சில குடும்பங்கள் கோடியில் புரளும் சாதனையை எவராலும் முறியடிக்க முடியாது.

டாஸ்மாக்கில் பெரிய அளவில் மோசடிகள் நடந்துள்ளதும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதும் இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது. தாங்கள் செய்த மோசடிகளை மக்களின் பார்வையிலிருந்து திசை திருப்பிட, ரூபாய் குறியீட்டை மாற்றி குழப்ப அரசியலில் ஈடுபட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘டாஸ்மாக் ஊழல்’ பற்றி வாய் திறக்க மறுக்கிறார்.

உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிறகும் கூட ஊழல் புகாரில் சிறை சென்று வருபவர்களை தியாகியாக்கி, பிறகு அவர்களை அமைச்சராக்கி, மேலும் மேலும் ஊழல் செய்து பணம் குவிப்பதையே திமுக தலைமை விரும்புகிறது. மீதமிருக்கும் ஓராண்டில் எவ்வளவு சுரண்ட முடியும் என்பது மட்டுமே திமுகவினரின் கணக்காக இருக்கிறது. மக்கள் நலத்திட்டங்களை பற்றி இந்த அரசுக்கு என்ன கவலை இருக்க முடியும்?” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செல்வபெருந்தகை – காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிகையில், “2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சமர்ப்பித்திருக்கிறார். இதில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களும், நிதி ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 2,329 கிராமங்களில் 1 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6,100 கி.மீ. கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி.

அதேபோல மகளிர் உரிமை திட்டம் தற்போது 1 கோடியே 15 லட்சம் பேர் ரூ.1000 மாதந்தோறும் பெற்று பயனடைந்து வருகின்றனர். இதை மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கடும் நிதி நெருக்கடிகளுக்கிடையே இத்திட்டத்திற்கு ரூ.1,3807 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி படிப்பில் சேருகிற வாய்ப்பை அதிகப்படுத்த புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 4 லட்சம் பெண்கள் பயனடைந்திருக்கிறார்கள். இதனால் உயர் கல்வியில் சேருவோர் எண்ணிக்கை 19 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

மகளிர் சுயஉதவிக்குழு திட்டத்தில் 4.76 லட்சம் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 10,000 புதிய குழுக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூபாய் 37,000 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட உள்ளது. அதேபோல, மகளிர் விடியல் பயணத்திற்கு ரூ.3,600 கோடி, காலை உணவு திட்டத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கிற மாணவர்கள் 17 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தை நகர்ப்புறங்களில் விரிவாக்கம் செய்வதன் மூலம் 3.14 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இதனால் மாணவர்கள் பள்ளிகளுக்கான வருகை அதிகரித்திருக்கிறது. இதற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, மதிய உணவு திட்டத்தினால் மாணவர் வருகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநிலமும் கடைபிடிக்காத காலை உணவுத் திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியதன் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை முதல்வர் செய்திருக்கிறார்.

மும்மொழித் திட்டத்தை ஏற்கவில்லை என்றால் பள்ளி கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க மாட்டோம் என்று மத்திய அரசு அறிவித்தாலும், இன்றைய நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்கு ரூ. 46,767 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டத்திற்கு ரூ.2,152 கோடி, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்காக ரூ.2,000 கோடி ஒன்றிய அரசு வழங்க மறுத்த நிலையில், பள்ளிகளின் செயல்பாட்டிற்கு மாநில அரசின் சொந்த நிதியிலிருந்தே நிதி ஒதுக்கப்பட்டிருப்பது தமிழக முதல்வருக்கு இருக்கிற கொள்கை பற்றை வெளிப்படுத்துகிறது.

அதேபோல, கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை பெருக்கி வாழ்வாதாரத்தை உருவாக்கிடும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வழங்க வேண்டிய ரூ.3,796 கோடி விடுவிக்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இந்த நிதியை வழங்க மறுப்பதன் மூலம், 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு முடக்க திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதையும் மீறி தமிழக அரசு இந்த திட்டத்தை சொந்த நிதியிலிருந்து நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது.

மூத்த குடிமக்களுக்காக ரூ.10 கோடி செலவில் அன்புச்சோலை மையங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குடிமைப்பணிகளுக்கான தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் மாதம் 7,000 வீதம் 10 மாத காலத்திற்கு வழங்க நிதி ஒதுக்கியிருப்பதன் மூலம் அகில இந்திய தேர்வுகளில் தமிழக மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அரசு கல்லூரிகளில் 15,000 இடங்கள் கூடுதலாக விரிவுபடுத்தப்பட இருக்கிறது.

சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் அமைக்கப்பட இருக்கிறது. திருக்குறள் இதுவரை 28 இந்திய மொழிகளிலும், 35 உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதை விரிவுபடுத்தி உலக மொழிகள் அனைத்திலும் திருக்குறள் வெளியிடும் திட்டத்திற்காக ரூ.133 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு 3,500 கோடியில் 1 லட்சம் புதிய வீடுகள் அமைக்கப்பட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி இரண்டு ஆண்டுகளில் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்கு காரணமாக பகிரங்கமாக மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதி வழங்க மாட்டோம் என்ற பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிற இக்கட்டான சூழலில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடுகிற வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. எத்தனை சோதனைகள் வந்தாலும், அடக்குமுறைகளை ஏவிவிட்டாலும் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக எடுக்கிற முயற்சிகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெறும் என்பதை இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார்.

அனைத்து மக்களையும் உள்ளடக்கி பயன்பெறுகிற வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து முறையாக நிதியை ஒதுக்கியிருக்கிற நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவைப் பாராட்டுகிறேன். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நேரலையாக பொதுமக்கள் காண்கிற வகையில் தமிழகத்தில் 936 இடங்களிலும், சென்னையில் மட்டும் 100 இடங்களில் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இதன்மூலம் தமிழக அரசின் பட்ஜெட் மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட் என்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது. தமிழகத்தை தலைநிமிர வைக்கும் நோக்கத்தில் மக்கள் முன்னேற்றத்திற்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கையை வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று  தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- எல்லோருக்கும் எல்லாம் என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக் குறித்த பரப்புரை, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு யாருக்கும் எதுவும் இல்லை என்ற எதார்த்தத்துடன் நிறைவடைந்திருக்கிறது. கல்வி, மருத்துவம், வேளாண்மை போன்ற முதன்மைத் துறைகளுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மாணவர்களுக்கு இலவச கணினி போன்ற சில கவர்ச்சியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் கூட, அவை மக்களை ஏமாற்றும் அறிவிப்புகளாக உள்ளன. 2025-26ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். திமுக அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை என்பதால் மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் ஏமாற்றமே பரிசாகக் கிடைத்திருக்கிறது.

கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு நிதியமைச்சர் நீண்ட நேரம், அதாவது 2.40 மணி நேரம் உரையாற்றினார்; நிதிநிலை அறிக்கை ஆவணம் மொத்தம் 182 பக்கங்களைக் கொண்டிருந்தது என்றாலும் அதில் திட்டங்களைத் தான் காணவில்லை. 1. ஐ.நா. அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகளின் அலுவல் மொழிகளிலும் திருக்குறளை மொழி பெயர்க்க இன்னும் 45 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளதாகவும், அதற்கான ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழை கட்டாயப் பயிற்றுமொழியாகவும், கட்டாயப் பாடமாகவும் செயல்படுத்த எந்த அறிவிப்பையும் திமுக அரசு வெளியிடாதது ஏன்?

தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்; அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம் போலவே மத்திய அரசை கைகாட்டி விட்டு தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டது. இது சமூகநீதிக்கு திமுக அரசு இழைத்திருக்கும் பெரும் துரோகம் ஆகும்.

பள்ளிக்கல்வித்துறை தான் மிகவும் முக்கியமானது ஆகும். அத்துறைக்கு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 6%, அதாவது ரூ. 2.14 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், அதில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது ரூ.46,767 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தகாலங்களில் பள்ளிக்கல்வித்துறைக்கான ஒதுக்கீடு சராசரியாக ரூ.4000 & ரூ.5000 கோடி என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டில் ரூ.2725 கோடி தான் உயர்த்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் 20 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், 2562 ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போதிய நிதியும், ஆசிரியர்களும் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமானக் கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?

உயர்கல்வித்துறைக்கான நிதி ரூ.1543 கோடி மட்டும் தான் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் அரசு கல்லூரிகளில் 15 ஆயிரம் மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அரசு கல்லூரிகளில் 8 ஆயிரத்திற்கும் கூடுதலான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை.

மருத்துவத் துறைக்கான நிதி ஒதுக்கீடு வெறும் ரூ.1708 கோடி மட்டும் தான் உயர்த்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று வரை ஒரே ஓர் அரசு மருத்துவக்கல்லூரி கூட தொடங்கப்படவில்லை. வரும் ஆண்டிலும் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

மாதம் ரூ.1000 மகளிர் உதவி வழங்கும் திட்டத்தில் பல லட்சம் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல மாதங்களாகக் கூறி வருகிறார். ஆனால், இந்த நிதிநிலை அறிக்கையில் அத்திட்டத்திற்கான நிதி ரூ.87 கோடி மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பெரும் பகுதி நிர்வாகச் செலவினங்களுக்கே சென்று விடும் நிலையில், புதிய பயனாளிகள் எங்கிருந்து சேர்க்கப்படுவார்கள்? என்பதற்கு தமிழக அரசு தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரிக்கப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. ஆனால், நடப்பாண்டில் அத்திட்டத்திற்கு எவ்வளவு கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதே நிதிநிலை அறிக்கையில் கூறப்படவில்லை.

நீர்வளத்துறையின் சார்பில் சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்கான 1.6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட 6&ஆம் நீர்த்தேக்கம் திருப்போரூர் அருகில் 4375 ஏக்கரில் அமைக்கப்படவிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள் ஒன்று கூட அறிவிக்கப்படாதது ஏன்?

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைக்கும் திட்டம் மட்டும் தான் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல. இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியுள்ளது.

2025-26ஆம் ஆண்டின் இறுதிக்குள் 40 ஆயிரம் பேருக்கு புதிய அரசு வேலைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆண்டுத் திட்டம் இன்னும் வெளியிடப்படவில்லை; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதன் ஆண்டுத் திட்டத்தை அறிவித்து விட்டாலும் கூட, எந்தப் பணிக்கு எவ்வளவு பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் 40 ஆயிரம் பேருக்கு அரசு வேலை என்பது ஏமாற்று வேலை தான்.

20 லட்சம் மாணவர்களுக்கு மடி கணினி அல்லது கையடக்கக் கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது அடுத்த இரு ஆண்டுகளில் தான் வழங்கப்படுமாம். திமுக அரசின் பதவிக்காலம் இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் 20 லட்சம் பேருக்கு மடிகணினி வழங்குவது சாத்தியமில்லை; அந்த வகையில் இதுவும் சாத்தியமற்றதாகும்.

சென்னை, கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை விரைவுபடுத்த அறிவிப்புகள் இல்லை. அவற்றுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டது என்பதையே தமிழக அரசு மீண்டும், மீண்டும் கூறி வருகிறது. இதுவும் மக்களை ஏமாற்றும் செயல் தான். இன்னொருபுறம் தமிழக அரசின் நிதிநிலை மிகவும் மோசமடைந்து கொண்டிருக்கிறது. நடப்பாண்டில் வருவாய்ப் பற்றாக்குறை இருக்காது என்றும், ரூ.1000 கோடிக்கும் மேல் வருவாய் உபரி கிடைக்கும் என்றும் தமிழக அரசு கூறி வந்த நிலையில், ரூ.41,634.93 கோடி வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நிதிப்பற்றாக்குறை ஒரு லட்சம் கோடியைத் தாண்டி விட்ட நிலையில் நிலைமையை சமாளிக்க நடப்பாண்டில் ரூ.1.62 லட்சம் கோடியை தமிழக அரசு கடனாக வாங்க இருக்கிறது. இதனால் 2025-26ஆம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் கடன் ரூ. 9 லட்சத்து 29,959 கோடியாக அதிகரிக்கும். அதற்கான வட்டியாக மட்டும் ரூ.70,753 கோடி செலுத்த வேண்டியிருக்கும்.

நடப்பாண்டின் முடிவில் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.25 லட்சம் கடன் வாங்கப்பட்டிருக்கும். மொத்தத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கு பயனளிக்காத, கடன்சுமையை மட்டுமே அதிகரிக்கக்கூடிய நிநிநிலை அறிக்கை ஆகும்.

இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

திருமாவளவன் – விசிக

விசிக தலைவர் திருமாளவன் கூறும்பாது,  தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை  அனைத்து தரப்பினரும் வரவேற்கும் விதமாக உள்ளது.பெண்களை முன்னேற்ற 20 சதவீத மானியத்தில் தொழிற்கடன் வழங்கும் திட்டம் பாராட்டுக்குறியது. ஐந்து லட்சம் பேருக்கு பட்டா வழங்குவது பாராட்டுக்குறியது. கடலூர், விழுப்புரத்தில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு பாராட்டுகுறியது. விசிகவின் கோரிகையை ஏற்று செய்யூரில் 800 ஏக்கரில் தொழிற்பூங்கா அமைக்கவுள்ளது குறித்து முதல்வருக்கு நன்றி சொல்கிறோம்.

பதவி உயர்வு தொடர்பாக இந்த நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பு இல்லைஇல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

டாஸ்மாக்கில் ஊழல் முறைகேடு நடந்திருந்தால் அமலாக்கத்துறை அதனை சட்டபூர்வமாக அணுகும், அதனை டாஸ்மாக் நிறுவனம் சட்டப்பூர்வாக எதிர்க்கொள்ளும்.

நாங்குநேரி சம்பவத்தை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பல பட்டியலின இளைஞர்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது சாதி அமைப்புகள் தான் காரணம். ரூ என்பது வழக்காமாக பயன்படுத்துவதுதான். புதிதாக ஒன்றும் இல்லை. கல்வி உதவித் தொகையை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை – பாஜக

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை பகிர்ந்த ஒரு பதிவில், “இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்து சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது. தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது. ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது. திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு பதிவில் தமிழக பட்ஜெட்டை நேரலையில் மக்கள் காண ஏற்பாடு செய்திருந்த திரையின் முன்னால் காலியாக கிடந்த இருக்கைகளின் படத்தைப் பகிர்ந்து, “பல ஆயிரம் கோடி ஊழல் மட்டுமே செய்து, தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், விளம்பரத்துக்காக வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் திமுக வெளியிடும் பட்ஜெட்டும், இதுபோன்று காலியாக இருப்பதில் வியப்பில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வழக்கம் போல, கழகக் கண்மணிகளின் ஒரு நாள் கரகோஷத்துக்காக, வெற்று விளம்பர அறிவிப்புகள் நிரம்பிய பட்ஜெட்டை வெளியிட்டு, தனது ஆண்டொரு நாள் கடமையை நிறைவு செய்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. தனது தேர்தல் வாக்குறுதிகளாக திமுக கொடுத்த பல முக்கியமான வாக்குறுதிகளைக் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று நான்கு ஆண்டுகளாகக் காத்துக் கொண்டிருந்த பல்வேறு தரப்புப் பொதுமக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றத்தில் தள்ளியிருக்கிறது இந்த பட்ஜெட்.

திமுக தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவையான 30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படும், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்க தொகை வழங்கப்படும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும், பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும், அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படுவதோடு, புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், 100 நாள் வேலைத் திட்டம், 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும், பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும், மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என எந்த வாக்குறுதிகள் குறித்தும், இந்த ஆண்டும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

ஆனால், வழக்கமாக, திமுக பட்ஜெட்டில், அறிக்கையளவிலேயே நின்று விடும் அறிவிப்புகளான, வடசென்னை வளர்ச்சித் திட்டம், அடையாறு சீரமைப்புக்கு ரூ.1,500 கோடி நிதி, மின்சாரப் பேருந்துகள், இந்து ஆலயங்களை புனரமைக்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு போன்றவை தவறாது இடம்பிடித்திருக்கின்றன. ஆனால், நான்கு ஆண்டுகளாக எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நான்கு ஆண்டுகளில், இவர்கள் அறிவித்த மின்சாரப் பேருந்துகள் எண்ணிக்கைக்குக் கணக்கே இல்லை. ஆனால், அவற்றில் ஒரு பேருந்து கூட இன்னும் சாலையில் ஓடவில்லை என்பதுதான் நகைச்சுவை. ஒவ்வொரு ஆண்டும், ஒரு நாள் கூத்துக்கு அறிவிப்புகளை வெளியிடுவது, திமுக அரசின் பட்ஜெட் சம்பிரதாயம் ஆகிவிட்டது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.7,890 கோடி அறிவித்தார்களே தவிர ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. இந்த ஆண்டு, ஒகேனக்கல் என்ற பெயரே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு, சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறையின் கீழ் அறிவிக்கப்பட்ட பூஞ்சோலை திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. இது தவிர, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைப் பெயர்மாற்றி வெளியிட்ட அறிவிப்புகள் தவிர, மக்களுக்கான எந்தத் திட்டங்களும் இல்லாத, வழக்கமான திமுக பட்ஜெட்டாகவே இந்த ஆண்டும் இருக்கிறது.

ஆனால், இத்தனை ஆண்டுகளாக இலைமறை காயாக தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கேற்ற அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்த திமுக அரசு, இனி வரும் எந்த ஆண்டுகளிலும் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்பு தங்களுக்குக் கிடைக்காது என்பது தெரிந்ததும், வெளிப்படையாகவே சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.

அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருக்கும் பட்ஜெட்டில், கிழக்குக் கடற்கரை சாலை தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக கூறப்பட்டிருக்கும் பகுதிகள் அனைத்திலும், திமுகவுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஏற்கெனவே தடம் பதித்திருப்பதைத் தற்செயலாக எடுத்துக் கொள்ள முடியாது. பொதுமக்கள் வரிப்பணத்தில், தனியார் நிறுவனங்கள் கொழிக்கத் திட்டங்கள் அறிவிக்கும் ஒரே அரசு திமுகவாகத்தான் இருக்க முடியும்.

தமிழக அரசின் வருமானத்தில் முக்கியப் பங்கு வகிப்பது, டாஸ்மாக் மதுபான விற்பனை. சுமார் 50,000 கோடி ரூபாய் வருமானம் டாஸ்மாக் மூலம் கிடைக்கிறது. மது விற்பனை வருமானம் இல்லாத குஜராத் அரசு ரூ.19,695 கோடிக்கு வருமான மிகை பட்ஜெட் தாக்கல் செய்கிறது. ஆனால், தமிழகம் ரூ.46,467 கோடிக்கு பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறது. குஜராத் அரசு உட்கட்டமைப்புக்குச் செலவிடும் தொகை ரூ.95,472 கோடி. தமிழகம் அதை விட மிகக் குறைவாக, ரூ.57,231 கோடி மட்டுமே உட்கட்டமைப்புக்குச் செலவிடுகிறது.

குஜராத் மாநிலத்தின் கடன் ரூ.3.7 லட்சம் கோடியாக இருக்கையில், தமிழகத்தின் கடன் கிட்டத்தட்ட மூன்று மடங்காக, ரூ.9.62 லட்சம் கோடியாக இருக்கிறது. நான்கு ஆண்டுகளில் நாட்டிலேயே மிக அதிக கடன் பெற்ற மாநிலமாக மாற்றியிருப்பதுதான் திமுக அரசின் சாதனை.

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது. தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது. வெற்று விளம்பர அறிவிப்புகளும், அதற்கான வீண் செலவுகளும் உயர்ந்துள்ளது. திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக” என விமர்சித்துள்ளார்.

முத்தரசன் – இந்திய கம்யூனிஸ்டு

” கடந்த நான்கு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வரும் மகளிர் உரிமைத் தொகை, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களை விரிவு படுத்தி, பரவலாக்குவதில் நிதி நிலை அறிக்கை கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.

பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்வி வசதிக்காக 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2000 வழங்கும் திட்டம் குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் தொன்மை மரபையும், இணையற்ற நாகரிக வாழ்வையும் எடுத்துக் கூறும் தொல்லியல் ஆய்வுகளுக்கும், அருங்காட்சியகங்கள் அமைக்கவும் முன்னுரிமை வழங்கியுள்ளது.

பிறநாட்டு நல்லறிஞர்கள் “தெள்ளுற்ற தமிழமுதின் சுவை” ருசிக்க தலைசிறந்த தமிழ் நூல்கள் பிறநாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழர்களின் திறமையான புலமைக்கு வெளிநாட்டார் வணக்கம் செய்தல் வேண்டும் என்ற மகாகவியின் கனவு நனவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் டைடல் பூங்காக்கள், தொழில் பேட்டைகள் தகவல் தொழில்நுட்ப வளாகங்கள் அமைப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. பெண் தொழில் முனைவோர் உருவாக்கும் திட்டம் பெண்களை அதிகாரப்படுத்தும் திசையில் புதிய கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். மூன்றாம் பாலினத்தவர்களை ஊர்க்காவல் படையில் தேர்வுசெய்வது, அவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தி மெட்ரோ ரயில் திட்டம், விமான நிலைய விரிவாக்கம் போன்றவைகளில் கவனம் செலுத்தியுள்ளது. அதிக அன்னிய முதலீடு ஈர்க்கப்பட்டதில் நிதிநிலை அறிக்கை பெருமிதம் கொள்கிறது.

கொரோனா காலத்தில் இருந்த நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு பணப் பலன் திட்டத்தை அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் ஏப்ரல் மாதத்தில் இருந்து மீண்டும் பெறலாம் என அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு களத்தில் நுழைந்து வரும் நிலையில் அதனை எதிர்கொள்ள 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளதும் ஒன்றிய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்து, தனது கொள்கையை ஏற்க வேண்டும் என நிர்பந்தித்து வரும் நிலையிலும் இரு மொழிக் கொள்கையில் உறுதிகாட்டிவருவதும், வருவாய் பற்றாக்குறையைக் குறைத்திருப்பதும் பாராட்டி வரவேற்றதக்கது.

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை, தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டங்கள் அறிவித்துள்ள போதிலும், அரசின் பல்வேறு துறைகளில் நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில், ஒப்பந்தப் பணியாளர்களாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை.

தனி நபர் வருமானம் உயர்ந்து வரும் தமிழ்நாட்டில் சொற்பத்தொகை தொகுப்பூதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்கள் பணிபுரிந்து வருவதை நிதி நிலை அறிக்கை காணத் தவறியது வருத்தம் அளிக்கிறது. நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு தொழிலாளர் ஊதியபாக்கி உட்பட ரூ.3 ஆயிரத்து 896 கோடி நிதி வழங்க மறுத்துவருவதை கடுமையான குரலில் கண்டித்திருக்க வேண்டும்.

சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினர் மின் கட்டணத்தில் சலுகை கோரி வருவதையும், நிலைக்கட்டணத்தை இரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி வருவதையும் நிதி நிலை அறிக்கை கருத்தில்கொண்டிருக்க வேண்டும். 2025- 26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை சமூகத்தின் பல தரப்பு மக்களின் உணர்வுகளை பிரதிபலித்துள்ள போதிலும், தொழிலாளர்கள், அடித்தட்டு உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்பு தொடர்கிறது.”

சண்முகம் – மார்க்சிய கம்யூனிஸ்டு 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  “தமிழக அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2025-26 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், தமிழகத்தில் ஏற்கெனவே அமலாக்கப்படும் சமூக நலத்திட்டங்களை மேலும் வலுப்படுத்துவற்கான ஆலோசனைகளும், அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு சார்பில் வரவேற்கிறோம். குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்வது, மாணவர்களுக்கான காலை நேர உணவு திட்டம் நகர்ப்புறத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தி கூடுதலான நிதி ஒதுக்கீடு, கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணிணி, மாநகராட்சிகளில் 30 இடங்களில் முதல்வர் படிப்பகம் ஆகிய அம்சங்கள் வரவேற்கத்தக்க நடவடிக்கைகளாகும்.

நடப்பு நிதியாண்டில் 5 லட்சம் மனைப் பட்டாக்கள் வழங்கப்படும் எனும் அறிவிப்பும், நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கவனம் செலுத்தியிருப்பதும் நல்ல அம்சம். அதேபோல, பெற்றோரை இழந்த மாணவ மாணவியருக்கு 18 வயது வரைக்கும் மாதம் ரூ.2,000 வழங்கப்படுவது, ஆதரவற்ற முதியோருக்கு “அன்பு சோலை” எனும் பராமரிப்பு இல்லங்கள் அமைக்கப்படுவது, வளரிளம் பெண்களுக்கு கருப்பை புற்று நோய் தடுப்பிற்கான தடுப்பு மருந்து திட்டம் ஆகியவையும் நல்ல முன்முயற்சிகளாகும்.

அரசு ஊழியர் – ஆசிரியர்களின் ‘சரண்டர் விடுப்பு பணப்பலன்’ கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க அறிவிப்பாகும்; அதை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ் இலக்கியங்களை மற்ற மொழிகளில் மொழி பெயர்ப்பது, புதிய நூலகங்கள், வெளிமாநிலங்கள் – வெளிநாடுகளில் தமிழ் புத்தக கண்காட்சிகள் நடத்துவது ஆகியவையும் வரவேற்கத்த நடவடிக்கைகளாகும்.

தமிழக அரசின் இத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை வரவேற்கும் அதே சமயத்தில், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்த அறிவிப்போ, அதற்கான நிதி ஒதுக்கீடோ இல்லாமல் உள்ளது.

குறிப்பாக 12 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில் 40,000 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் எனும் அறிவிப்பு, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களின் பணிக்கொடை நிலுவை ஆகியவை குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லாதது அந்த பகுதியினரிடையே பெரும் சோர்வை உருவாக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென பலகட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளனர். அரசிடமும் நேரடியாக முறையிட்டுள்ளனர். இருந்தும்கூட, உதவித்தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இல்லாதது மாற்றுத்திறனாளிகளிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதோடு, நிதி நிலை மீதான விவாதத்திற்கு பிறகேனும் விடுபட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

மத்திய பிஜேபி அரசு, தமிழகத்துக்குரிய நிதி ஒதுக்கீடு, மானியங்கள் வழங்குவதில் பாரபட்சம் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு 3,796 கோடி ரூபாய் தமிழகத்துக்கு தராமல் நிலுவை வைத்திருப்பது போன்ற செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து மாநிலத்துக்குரிய நிதியை பெற தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில் மத்திய அரசு உடனடியாக தமிழகத்துக்கு உரிய நிதியை வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்

இந்த விளம்பர மாடல் அரசோ தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு தமிழ்நாட்டு மக்களின் நலன்களையே மறந்துவிட்டு ஒரு பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது” என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.  “தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் புதிதாக 9 இடங்களில் தொழிற்பேட்டை அமைக்கப்படும், பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, ஈட்டிய விடுப்பு சரண் 15 நாட்கள் வரை பணப்பலன், பத்து லட்சம் வரை மதிப்புள்ள சொத்தை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் பதிவுத் தொகையில் சலுகை என்பது போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம். அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா என்ற பலமான கேள்வி எழாமல் இல்லை. காரணம், இந்த விளம்பர மாடல் அரசின் கடந்த கால வெற்று விளம்பர அறிவிப்புகளே.

புதிய அரசு கலை – அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரிக் கல்வியின் தரத்தை நிலைநிறுத்த என்ன முன்னெடுப்புகளை எடுக்கப் போகின்றீர்கள்? அடிப்படையான சாலை வசதிகளைக் கவனிக்காமல் அன்புச் சோலை போன்ற போலி அக்கறை காட்டும் வெற்று அறிவிப்பு ஏன்? கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணிணி வழங்கப்படுவது போல, பள்ளி மாணவர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லையே ஏன்?

ஆசிரியப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு, வெற்றிடங்களை நிஜமாகவே நிரப்பும் அறிவிப்பா? இல்லை, வழக்கம் போலான விளம்பர மாடல் அரசின் வெற்று அறிவிப்பா என்பது போகப் போகத்தான் தெரியும். அண்ணா பல்கலையைத் தரவரிசையில் மேம்படுத்தும் அறிவிப்பெல்லாம் இருக்கட்டும். முதலில், அண்ணா பல்கலையில் பயிலும் மாணவிகளுக்கு முறையான பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.

மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாட்டு அரசின் அறிவிப்பு குறித்து இந்த நிதி நிலை அறிக்கையில் விளக்கப்படவே இல்லை. மாறாக, மக்கள் நலன் சார்ந்த எந்த விளக்கமும் இல்லாமல் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு பரந்தூர் பகுதி விவசாயப் பெருங்குடி மக்களுக்குச் செய்யப்படும் துரோகமாகவே இருக்கும்.

விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் வாக்குறுதியான கேஸ் மானியம் ரூ.100 வழங்கப்படும் என்பது என்ன ஆனது என்று தெரியவில்லை. அதேபோல, பெட்ரோல்,டீசல் விலைக் குறைப்பு வாக்குறுதியில் சொன்னது போல முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மேலும், ரேஷனில் சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளும் என்ன ஆயின என்றே தெரியவில்லை.

பொதுமக்களை வெகுவாக பாதிக்கும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்படும் மின்சாரக் கட்டணம் மாதம்தோறும் செலுத்தக்கூடியதாக மாற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆனதோ? வெற்று விளம்பர அரசுக்கே வெளிச்சம் அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் குடியிருப்புகள் கட்டுவது இருக்கட்டும். அரசு ஊழியர்களின் லட்சக்கணக்கான குடும்பங்கள் நலன் சார்ந்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் முக்கியக் கோரிக்கையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்துவது பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை.

இந்த நிதிநிலை அறிக்கையில் பெரும்பான்மையாக ஏதேதோ அறிவிப்புகள் என்று போலித்தனமே அதிகம் உள்ளது. ஆனால், சாதாரண நிலையில் இருக்கும் பொதுமக்கள் நேரடியாகப் பலன் அடையும் அறிவிப்புகள் ஏதும் அற்றதாகவே இருக்கிறது.

விளம்பர மாடல் அரசின் மறைமுக முதலாளியாக இருக்கும் ஒன்றிய பாஜக அரசு பட்ஜெட்டில், டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டையே மறந்து ஒதுக்கியது. இந்த விளம்பர மாடல் அரசோ தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு தமிழ்நாட்டு மக்களின் நலன்களையே மறந்துவிட்டு ஒரு பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. இதுதான் இவர்கள் இருவரும் ஒரே மனநிலை கொண்ட உறவுக்காரர்கள் என்பதற்கான உறுதிப்பாடு ஆகும்.

மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு. இந்த ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம் மக்கள் கொடுக்கும் மிகப் பெரிய பதிலடியாக 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இருக்கும். இதை இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு விரையில் உணரும்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் – அமமுக

மக்கள் நலத்திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டிய நிதிநிலை அறிக்கை, திமுக அரசின் வீண் விளம்பரங்களும், நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளும் நிறைந்ததாக அமைந்திருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக தேவையற்ற பல பிரச்னைகளை தூண்டிய திமுக, நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கையிலும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அறிவித்திருப்பது அவர்கள் தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் என்பதையே வெளிப்படுத்துவதாகவும்,  எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு என எதுவுமே இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த நிதிநிலை அறிக்கைக்கான தலைப்பு, எல்லார்க்கும் எல்லாம் என்பதற்கு மாறாக, எவருக்கும் எதுவுமில்லை என்று வைத்திருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

ஜிகே வாசன் – தமாகா

பட்ஜெட் குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் உகந்ததாக அமையவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில் உறுதியான அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இல்லாதது ஏமாற்றத்தை அளிப்பதாகவும்,  லஞ்சம், ஊழலை அகற்ற முடியாத தமிழக அரசை புகழ் பாடி, மத்திய அரசை குறை சொல்லும் பட்ஜெட்டாகவே அமைந்திருப்பதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சீமான் – நாம் தமிழர் கட்சி.

அரக்க குணமும், இரக்கமற்ற மனமும் கொண்ட அரசு உருவாக்கியுள்ள வெற்று நிதிநிலை அறிக்கை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தொலைநோக்கு பார்வையற்ற, மக்களுக்கு எந்தப் பயனும், நன்மையும் தராத வெற்று அறிக்கையாகும். தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 1000 இடங்களில் இந்த வெற்று அறிக்கையை ஒளிபரப்ப  பல இலட்ச ரூபாய் மக்கள் வரிப்பணமும் இதற்காக வீணடிக்கப்பட்டுள்ளது. அதிகாரம் என்பது அரக்கக் குணமும், இரக்கமற்ற மனமும் கொண்டது. அதற்கு காதுகள் கிடையாது. அகன்ற வாயும், நீண்ட கால்களும் மட்டுமே உண்டு. அந்த கால்களால் மக்களை நசுக்கி, அதனை வாயினால் பேசி நியாயப்படுத்தும் என்ற பேருண்மையை நிறுவும் வகையில் பரந்தூர் வானூர்தி திட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து 1000 நாட்களுக்கு மேலாக போராடிக்கொண்டிருக்கும் நிலையில் அதனை விரைந்து நிறைவேற்றுவோம் என்று திமுக அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும்.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் 3.5 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப்பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் வெறும் 57 ஆயிரம் பணியிடங்களை மட்டுமே நிரப்பியுள்ளது. தற்போது ஆட்சியின் இறுதி ஆண்டில் இன்னும் 40 ஆயிரம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதை எப்படி நம்ப முடியும்? திமுக ஆட்சியில் அரசுப்பள்ளி ஆசிரியர் பணி நியமனம் என்பதே முற்று முழுவதுமாக இல்லாமல் போய்விட்டது. தற்போது 20 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் இந்த நிதி நிலை அறிக்கையில் ஆசிரியர் நியமன அறிவிப்பு 2500ஐ தாண்டவில்லை. இதுதான் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் திமுக அரசு கொண்டுள்ள அக்கறையா? இதன் மூலம் 5 ஆண்டுகளில் ஒட்டு மொத்தமாக ஒரு லட்சம் அரசு காலிப்பணி இடங்களைக் கூட நிரப்பப்போவதில்லை என்பதையும், தேர்தல் அறிக்கையில் சொன்னதும் பச்சைப்பொய் என்பதையும் இந்த நிதிநிலை அறிக்கை மூலம் திமுக அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை இந்த நிதிநிலை அறிக்கையிலும் வெளியிடாமல், மற்றொரு வாக்குறுதியையும் பொய்யாக்கி அரசு ஊழியர்களை திமுக அரசு வஞ்சித்துள்ளது. அதுமட்டுமின்றி, கல்விக்கடன் ரத்து, மாதாந்திர மின் கட்டணம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையிலும் இடம்பெறவில்லை. சென்னையில் சமச்சீர் குடிநீர் வழங்க நடவடிக்கை, புதிய துணை நகரம், அடையாறு நதி மீட்க 1500 கோடி, சென்னை திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்று இறுதியாண்டு நிதிநிலை அறிக்கையில்,  புதிது புதிதாக  திட்டங்களை அறிவிப்பது வேடிக்கையாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இவற்றை எல்லாம் செய்யாமல் திமுக அரசு என்ன செய்து கொண்டிருந்தது? 4 ஆண்டுகளில் செய்யாததை மீதமிருக்கும் ஓராண்டில் திமுக அரசு செய்யும் என்பதை எப்படி நம்ப முடியும்? ஓராண்டில் நூறாண்டு சாதனை, ஈராண்டில் ஈடில்லா சாதனை என்றெல்லாம் விளம்பரங்கள் செய்த திமுக அரசு குடிநீர் கூட முறையாக வழங்கவில்லை என்பது பெருங்கொடுமையாகும்.

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை 4 ஆண்டுகளாக நிறுத்தி வைத்து மாணவர்கள் கல்வியைப் பாழாக்கிவிட்டு விட்டு, தற்போது தேர்தல் வருவதை முன்னிட்டு மீண்டும் வழங்க முன்வந்துள்ளது திமுக அரசின் சுயநலத்தையே காட்டுகிறது. காலை உணவுத் திட்டத்தைச் சத்துணவு பணியாளர்களிடம் ஒப்படைத்து அவர்களை முழுநேர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. அரசு மதுபான கடைகளின் மூலம் தமிழ்நாட்டுக் குடும்பங்களைச் சீரழித்துத் தங்களது வருமானத்தைப் பெருக்கிக்கொண்டு, குடும்ப நலனுக்கான நிதி ஒதுக்கீட்டை கடந்த ஆண்டு அறிவித்த 38,925 கோடியிலிருந்து 34,153 கோடியாக திமுக அரசு குறைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. வீடுகள் இல்லாது பல்லாயிரம் மக்கள் வீதியில் குடியிருக்கும் நிலையில், வீட்டுவசதிக்கான ஒதுக்கீடும் கடந்த ஆண்டு அறிவித்த 45514 கோடியிலிருந்து 36655 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளதும் வேதனைக்குரியதாகும்.

ஆட்சி முடியும் தருவாயில் உரிமைத்தொகை வழங்கப்படாத பெண்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இந்த  நிதிநிலை அறிக்கையில் கூறுவது மற்றுமொரு ஏமாற்றாகும். ஒரு நாளைக்கு ரூபாய் 40 வழங்குவதுதான பெண்களுக்கான உரிமையா? அதைக்கூட வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உரிமைத்தொகை இல்லை என்று தவிர்த்துத் துரோகமிழைத்தது திமுக அரசு. வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டில் உள்ள வேலைகளையும் சேர்த்தே செய்யும் நிலையில் உள்ளபோது, அவர்களுக்கு உரிமைத்தொகை இல்லை என்பதும்  பெருங்கொடுமையாகும். கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் கடன் சுமை 9 இலட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கடன் 1 இலட்சம் கோடியாக மட்டுமே இருந்த நிலையில், திமுக அரசு இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் அடுத்த ஓராண்டிற்கே 1 இலட்சத்து 5 ஆயிரம் கோடிகள் கடன் வாங்கப்போவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு அரசின் கடன் சுமை 10 இலட்சம் கோடியைத் தாண்டிவிடும்.

3.73 இலட்சம் கோடி வருவாயில் தமிழ்நாடு அரசு 70000 கோடியை அதாவது வருவாயில் 19% வட்டியாக மட்டுமே கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அரசு ஊழியர் சம்பளம் மற்றும் நிர்வாகத்திற்கான அரசாங்க செலவே 1.41 லட்சம் கோடி (37.8%) எனும்போது, அதில் பாதியைக் கடனுக்கான வட்டியாகச் செலுத்தும் அரசு, எப்படி ஒரு நல்ல அரசாக இருக்க முடியும்? தமிழ்நாடு அரசு ஏறத்தாழ கடன் வாங்கும் வரம்பினை நெருங்கிவிட்ட நிலையில், அரசின் கடன்வாங்கும் திறன் கட்டுக்குள் இருப்பதாக ஆட்சியாளர்கள் பெருமை பேசுவது வெட்கக்கேடானது. 4 ஆண்டுகால திமுக ஆட்சியில், அரசின் கடன் சுமை அதிகரித்துள்ளதே தவிர, அக்கடனை மூலதனமாகக் கொண்டு தொழில் வளர்ச்சியும் அதிகரிக்கவில்லை; உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கவில்லை. நாம் தமிழர் கட்சி தனது ஆட்சி செயற்பாட்டு வரைவில் முன்வைத்த மூத்த குடிமக்கள் பராமரிப்புக்கான ‘அன்புச்சோலை’ என்ற முதியோர் பாதுகாப்புத் திட்டத்தைப் பெயரைக் கூட மாற்றாமல் அப்படியே அறிவித்துள்ள திமுக அரசுக்கு, இத்திட்டம் கடந்த 4 ஆண்டுகளில் நினைவுக்கு வராமல் போனது ஏன்? ஆட்சி முடியும் தருவாயில் தான் திமுக அரசுக்கு மக்கள் மீது அன்பு வருகிறதா? மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் தேர்தலை மட்டுமே குறியாக கொண்டு சாத்தியமற்ற வாக்குறுதிகளோடு  திமுக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ஆக்கப்பூர்வமான வளர்ச்சித் திட்டங்கள் ஏதும் இல்லாத, கவர்ச்சி அறிவிப்புகளை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சசிகலா உள்பட பல கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.