சென்னை: கொரோனா அதிகரிப்பு காரணமாக தமிழநாடு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளால், புத்தாண்டு சட்டமன்ற கூட்டத்தொடர் மீண்டும் கலைவாணர் அரங்கத்துக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக அதிகபட்ச பாதிப்பு சென்னையில் பதிவாகி வருகிறது. இதையடுத்து, சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக மத்தியஅரசு வலியுறுத்தி வந்தது. அதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளதுடன், 8ம் வகுப்பு வரை பள்ளிகளை மூடவும், தியேட்டர் மற்றும் வணிக நிறுவனங்களில் 50 சதவிகிதம் பேர் அனுமதிக்க வேண்டும் , பேருந்து, ரயில் பயணிகளிலும் 50 சதவிகித இருக்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, தமிழக சட்டமன்ற பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடர், மீண்டும் கலைவாணர் அரங்கில் நடத்த தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 50% இருக்கை கட்டுப்பாடு காரணமாக வரும் 5 ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கவிருந்த சட்டமன்ற கூட்டத்தொடர், இடநெருக்கடி காரணமாக, தலைமைச்செயலக வளாகத்தில் இருந்து, கலைவாணர் அரங்கத்திற்கே மீண்டும் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.