புதுச்சேரி: மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகளின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்றும், அரசு நிகழ்ச்சி அழைப்பிதழிலும் தமிழ் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும் ன  புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதிரடியாக அறிவித்து உள்ளார்..

 புதுச்சேரியில் மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநில சட்டசபை மார்ச் 10-ம் தேதி ஆளுநர் உரையுடன்  தொடங்கியது. இதையடுத்து,  மார்ச் 12 ஆம் தேதி  முதலமைச்சர் ரங்கசாமி மாநில பட்ஜெட் தாக்கல்  செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான  விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இன்று காலை சட்டசபை தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கேள்வி நேரத்தின்போது, பேசிய சில சட்டமன்ற உறுப்பினர்கள்,   புதுச்சேரியில் பல இடங்களில் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன என்று சுட்டிக்காட்டினர்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ரங்கசாமி, “புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உள்பட்ட அனைத்து இடங்களிலும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்து இருப்பது கட்டாயம். புதுச்சேரியில் உள்ள கடைகளில் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டியது கட்டாயம். நிச்சயமாக கடை வைத்திருக்கும் வியாபாரிகள் பெயர் பலகையில் தமிழில் பெயர் வைக்க வேண்டும். தமிழ் நமது உணர்வு/மேலும் அரசு விழா அழைப்பிதழ்களிலும் தமிழ் இடம்பெற்றிருக்க வேண்டும்” என்றார்.