தளிக்கோட்டை மகாதேவர் கோயில்
தளிக்கோட்டை மகாதேவர் கோயில் (Talikotta Mahadeva Temple) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின், கோட்டயம் மாவட்டத்தில் கோட்டயம் – குமரகம் சாலையில் மீனாசிலாற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு பழங்கால சிவன் கோயிலாகும். இந்த மகாதேவர் கோயிலானது தெக்கூர் அரச குடும்பத்தாரின் அதிகாரப்பூர்வ வழிபாட்டுக் கோயில்களில் ஒன்றாகும்.
நாட்டார் கதைகளின்படி, பரசுராமர் இந்த சிவனைப் பிரதிட்டை செய்துள்ளார். இந்த கோயில் கேரளத்தில் உள்ள 108 சிவன் கோயில்களின் ஒன்று ஆகும். 108 சிவன் கோயில் சோத்ரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு தளி கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். ( தளி கோயில், கோழிக்கோடு, 2. கதுத்ருதி மகாதேவர் கோயில், கோட்டயம், 3. கீழ்த்தளி மகாதேவர் கோயில், கொடுங்கலூர், 4. தளிகோட்டா மகாதேவர் கோயில், கோட்டயம். )
கோட்டயம் வட்டத்திலுள்ள தழத்தங்கடியில் உப்பூட்டிகாவலா அருகே தளிக்கோட்டை மகாதேவர் கோயில் உள்ளது. முந்தைய தெக்கும்கூர் அரசகுடும்பத்தாரின் ஒரு முக்கியமான வழிபாட்டுத் தலமாக இது இருந்தது. 11 ஆம் நூற்றாண்டின் தெக்கும்கூர் இராச்சியமானது கோட்டயம், சங்கநாசேரி, திருவல்லா, மற்றும் முண்டக்காயம், காஞ்சிரப்பள்ளி போன்ற உயர் தொலைவுப் பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.
இந்த இராச்சியத்தின் தலைநகரானது வெனிமலை, மணிகண்டபுரம், சங்கநாசேரி ஆகியவற்றிற்குப் பிறகு, மீனாசிலாற்றின் கரையில் உள்ள தளிக்கோட்டாவுக்கு மாறியது. கோயிலும் அரச மாளிகையும் தளிக்கோட்டை என்று அழைக்கப்பட்ட ஒரு கோட்டையால் பாதுகாக்கப்பட்டன. இதன் விளைவாகக் கோட்டை என்ற பெயரில் இந்த இடம் அறியப்பட்டது. வரலாற்றின் பிற்காலத்தில், தெக்கும்கூர் மன்னர்கள் தங்கள் இருப்பிடத்தை கோட்டயம் நகரத்தின் புறநகரில் உள்ள நட்ட சேரிக்கு (குமாரநல்லூருக்கு அருகில்) மாற்றிக்கொண்டனர் .
1750 ல் நடந்த சங்கநாசேரி போருக்குப் பிறகு, தளியோட்டானபுரத்தில் (கோட்டயம்) தளிகோட்டா கோட்டை மற்றும் அரண்மனையை நோக்கி மார்த்தாண்ட வர்மரின் படைகள் முன்னேறின. இராஜ்யத்தைப் பாதுகாப்பதற்காக தேக்கும்கூர் செம்பகாசேரி, வடக்குமூருடன் கூட்டணி வைத்திருந்தாலும், இவை அனைத்தும் இறுதியாக திருவிதாங்கூருடன் இணைக்கப்பட்டன.