ஆப்கானில் 20 ஆண்டுகளாக நடத்தி வந்த போரை நிறுத்தி சொந்த மண்ணுக்குத் திரும்புகிறது அமெரிக்கப் படை.

அமெரிக்க படையினரை ஆகஸ்ட் மாதம் 31 ம் தேதியுடன் வாபஸ் பெறுவதாக கடந்த மாதம் அறிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தாலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலை ஆப்கானிஸ்தான் அரசு முறியடிக்கும் என்று கூறியிருந்தார்.

ஜோ பைடன் இவ்வாறு கூறி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தாலிபான் படையினர் ஆப்கானின் பெரும்பகுதியைக் கைப்பற்றி இருப்பது, தலைநகர் காபூலை அவர்கள் கைப்பற்றுவதில் பெரிய சவால் எதுவும் இருக்காது என்பதையே உணர்த்துகிறது.

20 ஆண்டு போரில் 2300 க்கும் அதிகமான வீரர்களை தியாகம் செய்த அமெரிக்கா, வியட்நாம் போரில் சந்தித்ததை விட ஒரு மோசமான விளைவையே சந்தித்திருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

மேலும், 2001 ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்குக் காரணமான அல் கொய்தா அமைப்பிற்கும் அதன் தலைவன் ஒசாமா பின் லாடனுக்கும் ஆப்கான் அரசு தஞ்சம் அளிப்பதாகக் கூறி அதே ஆண்டு அக்டோபரில் ஆப்கான் மீது தாக்குதல் நடத்த அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் உத்தரவிட்டார்.

தாக்குதலுக்கு அஞ்சி காபூலை விட்டு ஓடிய தாலிபான்களைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானை நிர்வகிக்க ஹமீத் கர்சாய் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

பத்து ஆண்டுகளுக்குப் பின் 2011 ம் ஆண்டு மே மாதம் 1 ம் தேதி பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லாடனை அமெரிக்கப் படை சுட்டுக் கொன்றது, இதனைத் தொடர்ந்து 2016 ம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க படையை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அப்போதைய அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார்.

2016 ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப் பின் அமெரிக்க அதிபரான டிரம்ப் அமெரிக்க படையினர் ஆப்கானில் இருந்து இப்போதைக்கு வெளியேறமாட்டார்கள் என்று கூறியிருந்தார்.

ஒசாமா பின் லாடன் மறைவுக்குப் பின் அதிபர் ஒபாமா அறிவித்தது போல் அமெரிக்க படையினர் வெளியேறியிருந்தால் அது சாதுரியமான முடிவாக இருந்திருக்கும் என்றும், தற்போது அசுர வேகத்தில் தாலிபான்கள் செயல்படுவதை வைத்துப் பார்க்கும் போது அமெரிக்கா சரண் அடைந்து வெளியேறுவது போன்ற ஒரு நிலைமைக்குத் தள்ளப் பட்டிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆப்கானின் பெரும்பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள தாலிபான்கள், பல்வேறு மாகாணங்களின் தலைநகரைக் கைப்பற்றியுள்ளனர்.

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டுக் குடிமக்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற அறிவுறுத்தியுள்ள நிலையில், தாலிபான்களோ பிற நாட்டு தூதரகங்களை தாங்கள் எதுவும் செய்யமாட்டோம் என்று உத்தரவாதம் அளித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அரங்கேறி வரும் தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்திருக்கும் ஐ.நா. சபை, நிலைமை கைமீறிப் போயுள்ளதாகவும், தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி தாலிபான்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது.