சென்னை: சென்னையில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சித்லைவர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், நாம் தமிழர் தம்பிகள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் புரிய உடனடியாக களப்பணியாற்ற முன்வர வேண்டுமென்றும் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால், ஏரிகள், குளங்கள் நிரம்பி, உபரிநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பாய்ந்தோறும் நிலையில், பல பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீரால் சூழப்பட்டு உள்ளதால், 2 நாட்கள் கல்வி நிலையங்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளதுடன், இன்று அரசு அலுவலகங்களுக்கும் விடுமறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
இந்நிலையில், கனமழையால் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாத பெருமழையால் வெள்ளக் காடாக மாறியுள்ள சென்னை மாநகரில் வீடுகளிலும், சாலைகளிலும் தேங்கியுள்ள நீரினை விரைந்து அகற்றுவதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்கவும் அவர்களுக்குத் தற்காலிக உணவு மற்றும் பாதுகாப்பான உறைவிடம் கிடைக்கவும் தமிழ்நாடு அரசு வழிவகைச் செய்ய வேண்டும். மேலும் மின்சாரம் மற்றும் குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடை யின்றி கிடைப்பதையும், அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் உடனடியாக கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டுமென சென்னை மாநாகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
கடந்த காலங்களில் ஒவ்வொரு இயற்கைப் பேரிடரின்போதும் தன்னார்வலர்களாக முதலில் களத்தில் இறங்கி உதவி புரியும் நாம் தமிழர் தம்பிகள் தற்போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் புரிய உடனடியாக களப்பணியாற்ற முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.அதே சமயம், அன்பு தம்பி தங்கைகள் முதலில் தங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்துகொண்டு, மிக கவனமாக மக்கள் சேவையாற்ற வேண்டுமெனவும் அன்புடன் அறிவுறுத்துகிறேன்”.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.