டி.வி.எஸ். சோமு பக்கம்:
முதல்வர் ஜெயலிலதா குறித்து, இன்று தவறான தகவலை தந்த தொலைக்காட்சிகள் பற்றி ஆதங்கத்துடன் அலை பேசினார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.
“அந்தக்காலத்திலும் இப்படி நடந்தது உண்டு” என்றவர் அதற்கொரு சம்பவத்தையும் சொன்னார்:
“பற்பல ஆண்டுகளுக்கு முன்..
ஒரு மாலை நேரத்தில், ஏதோ ஒரு எஸ்.எல்.வி. ராக்கெட்டை, இந்திய விண்வெளித்துறை ஏவியது. அது கடலில் விழுந்துவிட்டது.
மறுநாள் காலை…
எல்லா நாளிதழ்களிலும், “ராக்கெட் கடலில் விழுந்தது” என்ற செய்தி வந்திருந்தது. ராக்கெட் கடலில் விழும் காட்சியும் இருந்தது.
ஆனால் ஒரு நாளிதழில் மட்டும், “ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது” என்று பெரிதாக செய்தி! அதோடு, நேராக ராக்கெட் பறக்கும் படமும் வெளியாகி இருந்தது.
எப்படி இந்த நாளிதழில் மட்டும் இப்படி செய்தி?
விஷயம் இதுதான்:
அந்த குறிப்பிட்ட நாளிதழ், சென்னையில் மாலை நேரத்தில் வெளியாகும். மற்ற ஊர்களில் காலையில் கிடைக்கும்.
ராக்கெட் செய்தியை அறிந்து வெளியிட காத்திருந்தால், இதழ் அச்சுக்குப் போக தாமதமாகிவிடும். ஆகவே, வெற்றிகரமாக பறந்த பழைய ராக்கெட் ஒன்றின் படத்தைப்போட்டு, “ராக்கெட் வெற்றி” என அச்சுக்கு அனுப்பிவிட்டார்கள். அதையே மறுநாள் வெளியூர்களுக்கும் அனுப்பி விட்டார்கள்.
இந்திய விண்வெளித்துறை மீது நம்பிக்கை வைத்து இப்படி செய்துவிட்டார்கள்” என்றார் அந்த மூத்த பத்திரிகையாளர்.
மேலும் அவர், “இது தவறுதான். அதே நேரம், அந்த காலத்தில் தகவல்களை சேகரிப்பதில், அதை வெளியிடுவதில் மிகுந்த தாமதம் ஆகும். அதைத் தவிர்க்க அப்படி செய்துவிட்டார்கள்.
இப்போது அப்படி இல்லை. விநாடி நேரத்தில் செய்தி சேகரித்து, அடுத்த விநாடி உலகம் முழுதும் கொண்டு சென்றுவிட முடியும்.
இந்த நிலையில் செய்தியை முந்தித் தருவது என்பதைவிட, பிழையின்றி தருவதுதானே சரி? அதுவும், அடுத்தர் உயிர் குறித்து?” என்ற கேள்வியை வீசியபடி போனை வைத்தார் அந்த மூத்த பத்திரிகையாளர்.