புதுடெல்லி:
ரஃபேல் வழக்கு கடந்த டிசம்பரில் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு மீது விசாரணை நடந்தது.
இதில் மனுதாரர்கள் சார்பில் பிரசாந்த் பூஷன், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா ஆகியோர் வாதாடினர்.
கடந்த டிசம்பரில் உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததில் உள்ள சட்டரீதியான தவறுகளை விளக்கினர்.
ரஃபேல் பேர வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினர்.
இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டபின், தி இந்து நாளேடு மற்றும் தி கேரவன் பத்திரிகையில் வந்த ஆதாரங்களின் அடிப்படையில் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் கடுமையாக எதிர்த்தார்.
பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ஆவணங்களை திருடியுள்ளனர். இந்த மறுஆய்வு மனுவை தாக்கல் செய்வதற்காகவே அவ்வாறு செய்துள்ளனர். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதிட்டார்.
அந்த ஆவணம் ரகசியமானது. அதனை வெளியிட்ட பத்திரிகைகள் மீது அரசு ரகசிய சட்ட மீறலின்படி நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருகின்றோம் என்றார்.