மும்பை: கொரோனா பரவல் விவகாரத்தில், தப்லிகி ஜமாத் அமைப்பைச் சேர்ந்த வெளிநாட்டினர் பலியாடுகளாக மாற்றப்பட்டுள்ளார்கள் என்று தனது தீர்ப்பில் கடுமையாக விமர்சித்துள்ளது மும்பை உயர்நீதிமன்றம்.
ஐவரி கோஸ்ட், கானா, தான்சானியா, பெளட்டி, பெனின் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரால் தாக்கல் செய்யப்பட்ட 3 தனித்தனி மனுக்களை விசாரித்த நீதிபதிகள் டிவி நலவாடே மற்றும் எம்ஜி செவ்லிகர் அடங்கிய அவுரங்காபாத் அமர்வு இத்தீர்ப்பை அளித்துள்ளது.
அந்த வெளிநாட்டினர் மீது, ஊரடங்கு விதிமுறைகளை மீறி பல்வேறு இடங்களில் தங்கி மத நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்று காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
ஆனால், தாங்கள் சட்டப்பூர்வ விசாவின் மூலமே இந்தியா வந்ததாகவும், விமானநிலையத்திலேயே தங்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டு, நெகடிவ் முடிவு வந்ததாலேயே தாங்கள் நாட்டிற்குள் வர அனுமதிக்கப்பட்டதாகவும், ஊரடங்கு விதிக்கப்பட்டதையடுத்து, போக்குவரத்து மற்றும் ஹோட்டல்கள் முடங்கியதால், தங்களால் எங்கும் செல்ல முடியாமல், ஆதரவு கொடுக்கப்பட்ட இடத்தில் முடங்கியதாகவும் அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.
அதேசமயம், தங்களின் பயணம் குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டுமென தங்களுக்கு யாரும் கூறவில்லை என்றும், மற்றபடி, அதிகாரிகளுக்கு தாங்கள் தகவல் தெரிவித்திருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
இந்நிலையில், இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், “ஒரு அரசியல் அரசு, நாட்டில் நோய் பரவல் மற்றும் பேரழிவு நிகழும்போது, இந்த வெளிநாட்டினர் பலியாடுகளாக மாற்றப்படும் சாத்தியம் உள்ளது தெரிகிறது.
மேற்கண்ட சூழல்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சமீபத்திய எண்ணிக்கை போன்றவற்றைப் பார்க்கும்போது, இந்த மனுதாரர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது. எனவே, இந்த நெருக்கடியான நேரத்தில், அந்த வெளிநாட்டினர் மீது பழிபோடுவதை விட்டுவிட்டு, நிலைமையை சரியாக்கும் வகையில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான சூழல் இது” என்றனர் நீதிபதிகள்.
மேலும், அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டதற்காகவும் கண்டம் தெரிவித்தனர் நீதிபதிகள்.