கர்நாடக முதல்- அமைச்சர் பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, அந்த மாநில பா.ஜ.க. துணை தலைவராக இருக்கிறார்.
அன்மையில் அவர் , கர்நாடக அரசு மருத்துவ அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியது பெரும் சர்ச்சையானது.
‘’கவுன்சிலர் பதவியில் கூட இல்லாத ஒருவர், அரசு அதிகாரிகளுடன் எப்படி ஆலோசனை நடத்தலாம்?’’ என அங்குள்ள எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
‘’ எடியூரப்பா மகன் நிழல் முதல்வராக செயல் படுகிறார்’’ என கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமய்யா குற்றம் சாட்டி இருந்தார்.
டெல்லி சென்றுள்ள எடியூரப்பாவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் ஆவேசமானார். ‘’ என் மகன் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக குற்றம் சாட்டுவது திட்டமிட்ட சதி. ஒரு மனிதனின் வளர்ச்சியை சிலரால், இயல்பாகவே பொருத்தக்கொள்ள முடிவதில்லை.. பா.ஜ.க. துணை தலைவர் என்ற முறையில் அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வலிமை படுத்துகிறார்’’ என்று எடியூரப்பா தெரிவித்தார்.
அண்மையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமியை சந்தித்து பேசியது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த எடியூரப்பா.’’ அவர் எம்.எல்.ஏ. என்ற முறையில் எனது வீட்டில் சந்தித்து பேசினார். அதில் எந்த உள் நோக்கமும் இல்லை.’’ என்று குறிப்பிட்டார்.
-பா.பாரதி.