டமாஸ்கஸ்::

சிரியாவின் கிழக்கு  பகுதியில் தினமும் ஐந்து  மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய ரஷ்ய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

சிரியாவின் கிழக்கு  பகுதியில் சண்டை நிறுத்தத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அழைப்பு விடுத்த பிறகும் அங்கு இரண்டாவது நாளாக தொடர்ந்து வான் தாக்குதல்கள் தீவிரமாக நடத்தப்பட்டன.

அங்கு  சமீபத்தில் நடந்த  வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தபட்சம் 21 பேர்  கொல்லப்பட்டதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தத் தாக்குதலில் இறந்தவர்களில்  7 பேர் குழந்தைகள்.  மேலும் பலர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், அரசுக்கு ஆதரவான படைகளால் டமாஸ்கஸின் புறநகர் பகுதியில், குளோரின் எரிவாயு பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக சம்பவ பகுதியில் பணியாற்றி வரும் மருத்துவ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே குண்டு வீச்சில் காயம் அடைந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்த போது கிழக்கு கவுட்டாவில் குளோரின் ரசாயன குண்டு வீசியிருப்பது தெரிய வந்தது. ரஷ்யா மற்றும் சிரியா ராணுவம் இணைந்து ரசாயன குண்டுகளை வீசியதாக புகார் எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதை ரஷ்யா மறுத்துள்ளது. ரசாயன குண்டு வீச்சுக்கு சிரியாதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர்  செர்ஜி லாவ்ரவ் தெரிவித்துள்ளார். . ஆனால் சிரியாவும் ரசாயன குண்டு வீச்சை மறுத்துள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் சர்ச்சை தொடர்கிறது.

இந்த நிலையில் ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷொயகு  “மனிதாபிமான போர் நிறுத்தம்” குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த போர் நிறுத்தம், உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் 2 மணி வரை தினமும் தொடரும் என அவர் கூறியுள்ளார். இதற்கான உத்தரவை அதிபர் புடின் விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். .