டில்லி:

ஐடிபிஐ வங்கியில் ரூ.600 கோடி கடன் வாங்கி மோசடி செய்த புகாரில் சிண்டிகேட் வங்கி நிர்வாக இயக்குனரும், ஐடிபிஐ வங்கியின் துணை நிர்வாக இயக்குனருமான மெல்வில் ரெகோ மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

மேலும் இந்த புகாரில் ஐடிபிஐ வங்கி முன்னாள் சிஎம்டி மற்றும் இந்தியன் வங்கி சிஇஓ கிஷோர் காரத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஏர்செல் நிறுவனர் சிவசங்கரனின் ஆக்செல் சன்சைன் நிறுவனமும் இந்த மோசடியில் சிக்கியுள்ளது. இதனால் சிவசங்கரன் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஐடிபிஐ வங்கியின் முன்னாள் மூத்த அதிகாரிகள் வீடுகள் உள்பட 50 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டுள்ளது. டில்லி, பரிதாபாத், மும்பை, காந்திநகர், சென்னை, பெங்களூரு, பெல்காம், ஐதராபாத், ஜெய்ப்பூர், புனே உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்துள்ளது.

சிவசங்கரனின் நிறுவனம் 2014ம் ஆண்டில் ரூ. 530 கோடிக்கு கடன் பெற்றுள்ளது. செயல்படாத சொத்தாக மாறியவுடன் இது தற்போது ரூ.600 கோடியாக உயர்ந்துள்ளது.