லக்னோ
உத்தரப்பிரதேசத்தில் பன்றிக் காய்ச்சலால் பலர் மரணம் அடைந்துள்ள நிலையில் அம்மாநில முதல்வர் இது ஒரு நோயே இல்லை எனக் கூறி உள்ளார்.
உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பல மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதைப் போல் இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சென்ற ஜனவரி மாதம் பரவத் தொடங்கிய பன்றிக் காய்ச்சலால் கிட்டத்தட்ட 900 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 14 பேர் மரணம் அடைந்துள்ளதாகத் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலின் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. அம்மாநிலத்தில் மட்டும் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். மீரட் நகரில் மட்டும் 6 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த நோய் மேலும் பல பகுதிகளில் வேகமாகப் பரவி வருவதால் இம்மாநில மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
நேற்று லக்னோ நகரில் நடந்த ஒரு மருத்துவ முகாமில் கலந்துக் கொண்டு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாக் கலந்துக் கொண்டு உரையாற்றி உள்ளார். அவர் தனது உரையில் ”உத்தரப்பிரதேச பன்றிக் காய்ச்சல் தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. உண்மையில் இந்த காய்ச்சல் எல்லாம் ஒரு நோயே இல்லை. பொதுவாக வானிலை மாறும் போது ஒரு சிலருக்குச் சளி பிடிக்கும் அல்லது காய்ச்சல் அடிக்கும்.
அதை நாம் உருவாகும் அடிப்படையில் பன்றிக் காய்ச்சல் மற்றும் பறவைக் காய்ச்சல் என்னும் பெயரில் அழைக்கிறோம். யாரும் பன்றிக் காய்ச்சலை நினைத்து பீதி அடைய வேண்டாம். சுகாதாரத் துறை இதற்காக ஒரு சிறந்த செயல் திட்டத்தைத் தயாரித்து வருகிறது. பன்றிக் காய்ச்சலைக் குறித்து மருத்துவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இதற்காக மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைத்து இந்த காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.