சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில், கஞ்சா விற்பனை செய்தவர்களை மடக்க காவல்துறையினர் நடத்திய அதிரடி ரெய்டில், ஸ்விக்கி ஃபுட் டெலிவரி செய்யும் இளம்பெண் ஒருவர், உணவு டெலிவரி போல போல கஞ்சா டெலிவரி செய்து விற்பனை செய்தது வந்தது தெரிய வந்தது. அவரை காவல்துறையினர் மடக்கி கைது செய்துள்ளனர்.

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வனிதா (32). இவர் சில நேரங்களில் கார் டிரைவராகவும்,  டிரைவர் பணி இல்லாத நேரத்தில் ஸ்விகி ஃபுட் டெலிவரி செய்யும் வேலையும் செய்து வந்துள்ளார்.  இவருக்கு கஞ்சா விற்பனை செய்பவருடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, கஞ்சாவை வாங்கி வந்து, உணவு டெலிவரி செய்வதுபோல,  டூவீலரில் சென்று, ஞ்சா தேவைப்படுவோருக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.  இது குறித்து ரகசிய தகவல் காவல் துறையினருக்கு கிடைத்த நிலையில், கஞ்சா விற்பனை செய்பவர்களை மடக்கும் நோக்கில், கிண்டி வேளச்சேரி சாலையில்  கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

அப்போது யமஹா ஃபேசினோ பைக்கில் வந்த சுவிக்கி டெலிவரி இளம்பெண் மீது சந்தேகம் ஏற்பட, பெண் காவலர்கள் அந்த இளம்பெண்ணை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், கோயம்பேடு பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வனிதா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதையடுத்து அவரது பைக்,  3 கிலோ கஞ்சா, 2 செல் போன் கள் மற்றும் 500 ரூபாய் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், வனிதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் பின்னர் சிறையில் அடைத்தனர்.