இந்த நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டால், இந்தியாவின் மதசார்பற்ற அரசியலமைப்பின் நிலைப்பிற்கு பேராபத்து காத்திருக்கிறது.
இதைக் கூறியிருப்பவர் ஸ்வீடன் நாட்டினுடைய ஒரு பல்கலைக்கழக பேராசிரியர் அசோக் ஸ்வெய்ன். நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அவர் சொல்லியிருக்கும் கருத்து, கடும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
அவர் கூறியுள்ளவற்றின் சுருக்கம்: இந்த நாடாளுமன்ற தேர்தலில் மட்டும், நரேந்திரமோடி மீண்டும் வெற்றிபெற்று பிரதமராகிவிட்டால், இந்தியாவின் மதசார்பற்ற அரசியலமைப்பு சட்டம், தொடர்ந்து நடைமுறையில் இருக்குமா? என்பது பெரிய சந்தேகம்.
கடந்த 1925ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்தே, ‘இந்தியாவை இந்துதேசமாக அறிவிக்க வேண்டுமென்பதை நோக்கமாகவும் லட்சியமாகவும் கொண்டுள்ளது. கடந்த 1949ம் ஆண்டே, இந்திய அரசியல் சாசனத்தின் வழிகாட்டு நூலாக, மனுஸ்மிருதி இருக்க வேண்டுமென வலியுறுத்திய அமைப்பாகும் அது.
மேலும், இந்திய தேசியக் கொடியில் தற்போது இடம்பெற்றிருக்கும் மூவர்ண நிற அமைப்பையும் நீண்டகாலமாக எதிர்த்துவரும் அமைப்பு அது.
நரேந்திரமோடி இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்தால், அந்த 5 ஆண்டுகாலத்தில், இந்தியாவை இந்து குடியரசாக மாற்றிவிட வேண்டுமென்பதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தெளிவாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில் இதை செய்யவில்லை என்றால், வேறு எப்போதும் அதை செய்ய முடியாது என்பதும் அதற்கு தெரியும்.
இவ்வாறு பல அதிர்ச்சிகரமான விஷயங்களைக் கூறி நம்மை திடுக்கிட வைத்துள்ளார் அந்தப் பேராசிரியர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வரலாற்றையும் அதன் கோட்பாடுகளையும் அறிந்தவர்களால், இத்தகைய விஷயங்களை நினைத்து கவலைப்படாமல் இருக்க முடியாது.
– மதுரை மாயாண்டி