டெல்லி: சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகிய அக்கட்சி பொதுச் செயலாளர் சுவாமி பிரசாத் மவுரியா அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் முன்னிலையில், காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவாமி பிரசாத் மவுரியா ஏற்கனபே பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, பாஜக என பல கட்சிகளில் பணியாற்றி உள்ளார். மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தேசிய பொதுச் செயலாளராக இருந்தவர் சுவாமி பிரசாத் மவுரியா. இவர், புத்த மதத்தை தழுவி அம்பேத்கர் பாதையை பின்பற்றி வருவதாக கூறி வருகிறார். இவர் மவுரியா சமூகத்தை சேர்ந்த நபர் என்பதால், அச்சமூக மக்களிடையே செல்வாக்குடன் திகழ்கிறார். இதைக்கொண்டு அவ்வப்போது மற்ற கட்சிகளுடன் பேரம் பேசி அணி மாறி வருகிறார்.
கடந்த 2016-ல் உபி சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் பிஎஸ்பியை விட்டு விலகிய மவுரியா, சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். சமாஜ்வாதியிலும் மவுரியா செல்வாக்குடன் இருந்தார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் அவர்திடீரென சமாஜ்வாதி கட்சியிலிருந்தும் வெளியேறினார். இதனால் பாஜகவில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் மவுரியா சமூக மக்களின் வாக்குகளை பெறும் நோக்கில் அவருக்கு மற்ற கட்சிகள் வலைவீசின.
இந்த நிலையில், சுவாமி பிரசாத் மவுரியா காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்தும் நியாய யாத்திரை உ.பி. வரும் நேரத்தில், அதாவது வரும் 18-ம் தேதி அலகாபாத்தில் நடைபெறும் யாத்திரையின்போது, ராகுலை சந்தித்து பேசும் மவுரியா காங்கிரஸ் கட்சியில் இணைவார் என கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் சரண் சிங் தொடங்கிய லோக் தளம் கட்சியின் இளைஞர் அணி மூலம் 1980-ல் அரசியல் பயணத்தை மவுரியா தொடங்கினார். பிறகு வி.பி.சிங்கின் ஜனதா தளத்திற்கு சென்றார். இவ்விரு கட்சிகளுக்கும் உ.பி.யில் சரிவு ஏற்பட்டதால் 1996-ல் பிஎஸ்பியில் இணைந்தார். இதன் மூலம் 4 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு 4 முறை அமைச்சர் பதவியும் அளித்தார் மாயாவதி. பிஎஸ்பி ஆட்சி 2002 மற்றும் 2012 தேர்தல்களில் பறிபோனதால் கட்சி எம்எல்ஏக்கள் குழு தலைவர் மற்றும்எதிர்க்கட்சி தலைவர் பதவிகளையும் மாயாவதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.