டெல்லி: அமளியில் ஈடுபட்டு சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்டால், அவர்கள் மீதான சஸ்பெண்ட் திரும்ப பெறப்படும் என, மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கிய நாள் முதல், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், அவை நடவடிக்கைகள் முடங்கி உள்ளது. ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சமையல் எரிவாயு உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள், விவாதிக்க வலியுறுத்தி குரல் எழுப்பி வருகின்றனர். இதனால், நாடாளுமன்றத்தின் மொத்த அலுவல்களும் முடங்கி உள்ளன.
இதற்கிடையே, நாடாளுமன்ற மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி, காங்கிரஸ் எம்பிக்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். அதைத்தொடர்ந்து நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள்19 பேரை, இந்த வாரம் முழுவதும் அவை நடவடிக்கைகளில் இருந்து சஸ்பெண்ட் செய்து, மாநிலங்களவைத் துணைத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து இன்று அமளியில் ஈடுபட்ட ஆத்ஆத்மி எம்.பி.யும் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மொத்தம் இதுவரை 24 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்ற எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவைச் சேர்ந்த மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. இதை பல முறை தெரிவித்து விட்டோம். மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாரானம் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணம் அடைந்து இன்று தான் அலுவல் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார். எதிர்க்கட்சிகள் விரும்பினால், இன்றே விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தலாம் என்று கூறியவர், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள், அவைத் தலைவரிடம் மன்னிப்புக் கேட்டால், அவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்ப பெறப்படும். மேலும், அவைகளில் பிளக்ஸ் பேனர்களை காட்ட மாட்டோம் என்றும், அமளியில் ஈடுபட மாட்டோம் என்றும் அவர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.