புதுடெல்லி: 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணி – 2.0 அரசில் பதவி வகிக்காத நிலையில், புதிய அரசு பதவியேற்ற ஒரு மாதகாலத்திற்குள் தனது அரசு பங்களாவை காலி செய்துள்ளார் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ்.

பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர்களுள் ஒருவர் சுஷ்மா. இவர் கடந்த மோடி அரசில் வெளியுறவு அமைச்சராகப் பதவி வகித்தார். ஆனால், 2019 மக்களவைத் தேர்தலில் இவர் போட்டியிடவில்லை. மேலும், புதிய அரசிலும் பங்கேற்கவில்லை.

எனவே, தனக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட எண்:8, சஃப்தர்ஜங் சாலை, புதுடெல்லி என்ற முகவரியிலுள்ள பங்களாவை, புதிய அரசு பதவியேற்ற ஒருமாத காலத்திற்குள் காலிசெய்துவிட்டார். இத்தகவலை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தான் அரசு பங்களாவை காலி செய்துவிட்டதால், இனிமேல் அந்த விலாசம் மற்றும் தொலைபேசி எண்ணில் தன்னை தொடர்புகொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

சுஷ்மா ஸ்வராஜின் இந்த செயல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. பல அரசியல்வாதிகள் காலம்கடந்து அரசு பங்களாவை காலிசெய்யாமல் இருந்து, இறுதியில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் இந்நாட்டில் அதிகம் நடந்துள்ளன.