ஞாயிறு என்றதுமே வாரத்தின் கடைசிநாள் என்றுதான் பலருக்கு நினைவில் வரும். ஆனால் நமக்கு பகல் முழுவது வெளிச்சத்தை தந்து நம்மை இயங்க வைக்கும் கடவுள் இருக்கும் தலத்தின் ஊர் ஞாயிறு. இதுபற்றியும் அந்த ஞாயிறு கடவுளான சூரியபகவான்… அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் “சூர்ய ஸ்தலத்தை” பற்றி பார்க்கப்போகிறோம்.
சென்னையிலிருந்து முப்பது கி.மீ. தொலைவில் இருக்கிறது ஞாயிறு என்ற கிராமம். இங்குதான் அருள் புரியும் சூரிய பகவானையும்,புஷ்பரதேஸ்வரரையும்
வந்து பார்த்தால்.வாழ்வில் இழந்ததை மீண்டும் பெறலாம்.
உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படுவதை உணரமுடியும்.
ஞாயிறு கோயிலுக்குள் நுழைந்ததுமே மனசுக்குள் இயற்கையாகவே ஒரு மகிழ்ச்சியை உணர்வீர்கள். மற்றும் கோவிலுக்கு வந்திருக்கிறோமா அல்லது ஏதாவது காட்டுக்குள் தவறி நுழைந்து விட்டோமா என்ற பயமும் உண்டாகும். ஆமாம் எங்கு திரும்பினாலும் இயற்கை எழில்கொஞ்சும் அருகம்புல் தோட்டம், மலர்ச்செடிகளின் கூட்டம் என்று இயற்கையே இறைவனாகக் காட்சியளிக்கும் ஒரு உன்னதமான இடம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை மிக்க ஞாயிறு கோவிலின் சிறப்பை சொல்லிக் கொண்டே போகலாம். சுந்தரமூர்த்தி நாயனாரின் துணைவியான தெய்வமகள் சங்கிலி நாச்சியார் அவதரித்த பூமி. சாகுந்தல காவியம் போற்றும் கன்வமகரிஷி முக்தி பெற்ற புண்ணிய இடம். ஆதிசங்கரரால் சொர்ணாம்பிகை ஸ்தாபிக்கப்பட்ட கோயில் என்று இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர்.
கோவில் வரலாறு;
பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் சிவ பக்தனான சோழ மன்னன் ஒருவன் ஆந்திரத்தில் இருந்து
நெல்லூர் வரை, படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றான். இந்த ஊருக்கு அருகில் இருக்கும் சோழவரத்தில் தங்கினான். காலையில் சிவனுக்கு பூஜை செய்வது இவனது வழக்கம். அன்றும் அதிகாலையில் சிவ பூஜை செய்வதற்காக செந்தாமரை மலர்களைத் தேடி, இறுதியில் இந்த ஞாயிறு கிராமத்திற்கு வந்தான். குளம் முழுக்கத் தாமரை மலர்கள் நிறைந்து இருந்தது. குளத்தின் நடுவில் ஒரு மலர், ஓங்கி உயர்ந்து மன்னனைப் பார்த்துப் புன்னகைப்பது போல் அசைந்தது. அதனைப் பறிக்க முயன்றான் சோழன் மன்னன்.
அவன் நெருங்க, நெருங்க மலர் விலகிக் கொண்டே போனது. கடைசியில் பொறுமையை இழந்தான் மன்னன். அந்த அபூர்வ தாமரை மலரை நோக்கித் தன் கத்தியை எடுத்து வீசினான்.
அந்தக் கத்தி, தாமரை மலரை இத்தனை நாட்கள் தண்ணீரின் அடியில் பாதுகாத்துக் கொண்டிருந்த சிவலிங்கத்தின் மேல் பட்டுச் சிதறியது. அந்த லிங்கத்திலிருந்து ரத்தம் பீறிட்டு, குளம் முழுக்க பரவியது. அத்துடன் பேரொளியும் கேட்டது. அதைப் பார்த்த மன்னவனின் கண்கள் பறி போயின. மன்னன் மயங்கி விழுந்தான். அவன் வந்த குதிரை வெறிகொண்டு கட்டுக்கடங்காமல் எங்கோ ஓடிவிட்டது.
சிவபெருமான் பேரொளியுடன் ஞாயிறாக மன்னனுக்குக் காட்சி தந்து மீண்டும் பார்வை கொடுத்தார். அந்த இடத்திலேயே தனக்கு ஒரு கோவில் எழுப்பும்படி கட்டளையிட்டார்.
மலர் வழியாக இறைவன் காட்சி தந்ததால் `புஷ்பரதேஸ்வரர்’ என்று அந்த சிவலிங்கத்திற்குப் பெயரிட்டு குளத்தங்கரையிலேயே அழகுடன் ஒரு கோவில் கட்டினான் மன்னன்.
இந்தச் சிவலிங்கத்தின் மேல், கத்தி பட்ட வடு இருப்பதை இன்றும் பார்க்கமுடியும். மன்னன் கண்பார்வையைத் திரும்பப் பெற்றதால், இங்கே வந்து இறைவனை தரிசனம் செய்தாலே கண் சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
மன்னன் வீசிய கத்தியின் முனை சிதறி உடைந்து விழுந்த இடம்தான் `கத்திவாக்கம்’. கைப்பிடி விழுந்த இடம் `கண்டிகை’. அரசன் தன் மார்பு கீழே படும்படி விழுந்த இடம்தான் `மாரம்பேடு.’ குதிரை விழுந்த இடம் `குதிரைப் பள்ளம்’ என்ற பெயர்களில் அருகில் ஊர்கள் இருக்கின்றன.
இந்த கோவிலில் இன்னோரு சிறப்பும் உண்டு. பிரிந்து போன கணவன் அல்லது மனைவி ஒன்று சேர இங்கே வழிபாடு நடத்துகிறார்கள்.
அதற்கு ஒரு கதையும் கூறப்படுகிறது.
தன்னைவிட்டுப் பிரிந்த மனைவி சாயாதேவியுடன் மீண்டும் சேர்வதற்காக திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தார் சூரிய பகவான். அப்போது வானத்தில் ஒரு ஜோதி காட்சியளித்து சூரியனுக்கு ஆசி கூறியபடியே மெல்ல நகர்ந்தது சென்றது.
அந்த ஜோதி வானில் ஊர்ந்து வந்து ஞாயிறு சிவலிங்கத்தின் மேலே விழுந்து மறைந்தது. தொடர்ந்து வந்த சூரியன் மிக மகிழ்ந்து புஷ்பரதேஸ்வரரை வழிபட்டு மனைவியுடன் மீண்டும் இணைந்தார்.
அந்த மகிழ்ச்சியில் ஞாயிறு ஆலயத்தின் மூலவருக்கு எதிரிலேயே காட்சியளிக்கிறார் சூரியபகவான். அவர் நீராடி சிவனை வழிபட்டதால் அங்குள்ள திருக்குளத்திற்கு சூரிய தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சித்திரை மாதம் முதல் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு சூரிய ஒளி சிவபெருமான் மற்றும் அம்மன் பாதங்களில் விழுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. சனி தோஷம் நீங்க திருநள்ளாறு செல்வது போல சூரிய திசை, சூரியபுத்தி நடக்கிறவர்கள் வழிபடவேண்டிய கோவில் இதுவாகும். இங்கு பல்லவர் காலத்து கமலவிநாயகர், முருகப்பெருமான், காலபைரவர், நடராஜர், சிவகாமி அம்மன், சங்கிலி நாச்சியார் ஆகியோரும் இங்கே அருள் புரிகிறார்கள்.
பஞ்ச பாஸ்கர ஸ்தலம் எனப்படும் ஐந்து சூரியத் தலங்களுள் ஒன்று இந்த ஞாயிறு கோவில். மற்றவை திருச்சிறுகுடி, திருமங்கலக்குடி, திருப்பரிதி நியமம், தலைஞாயிறு எனும் ஊரில் இருக்கின்றன. உங்கள் வாழ்வில் இனிமைகள் வர, நல்வை எல்லாம் நடக்க, உங்கள்
கண் ஒளி பலப்பட நீங்கள் ஒருமுறையாவது ஞாயிறு கோயிலுக்குச் சென்று வாருங்கள். அங்கே சூரியபகவானும் அவருக்கே ஒளி கொடுத்த புஷ்பரதேஸ்வரரும் அருள் புரிவார்கள்.
மேலும் அகத்திய முனிவர் குளத் தீர்த்தத்தில் மூழ்கி கோவிலை வலம் வந்து அங்கப்பிரதட்சணம், அடி பிரதட்சணம் செய்து தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபாடு செய்துவந்தால் நோய்கள் குணம் அடைவதாக ஐதீகம் உண்டு.
ஞாயிறு கோயில் செல்லும் வழி;
சென்னையிலிருந்து முப்பது கி.மீ. செங்குன்றம், சோழவரம், அருமந்தை வழியாகச் செல்லலாம்.
ரெட்ஹில்ஸிலிருந்து 57சி, டி57, ஏ58 போன்ற பஸ்கள் அங்கு செல்கின்றன.
கோவில் நடை திறப்பு நேரம்:
தினசரி காலை 7-11 மணி,மாலை 4-7 மணி, ஞாயிறு மட்டும் காலை 6-11மணி, மாலை 4-7 மணி வரை.
உணவு, தங்கும் வசதிகள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிட்த்தக்கது.