சென்னை: மழை பெய்வதை பொறுத்தே செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறந்துவிடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தாக்கத்தால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. புயலை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் தமிழக அரசும், புதுச்சேரி அரசும் ஈடுபட்டு உள்ளன.
இந் நிலையில், சென்னையில் புயல் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், குறித்தும், அது திறக்கப்படுமா என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியாகும். தற்போது 21 அடி நீர் இருப்பு உள்ளது. 22 அடி வரும்போது அணையை திறக்க உத்தரவிட்டு உள்ளேன்.
மழை 2 நாட்களுக்குதான் இருக்கும் என்று கூறி உள்ளனர். மழை பெய்வதை பொறுத்துதான் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கப்படும். ஏரிகளின் கரைகளை பலப்படுத்தவும், போதிய மணல் மூட்டைகளை வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.