ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் மாநகராட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் களை கட்டி உள்ளது.
ஐதராபாத் மாநகராட்சிக்கான தேர்தலுக்கு இன்னமும் ஒரு வாரமே உள்ள நிலையில் அரசியல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. பாஜக மாநில தலைவரும், கரிம் நகர் எம்பியுமான பாண்டி சஞ்சய்குமார் பேரணி ஒன்றை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது: இங்கு ஒரு பாஜக வேட்பாளர் மேயரானவுடன், ரோஹிங்கியாக்களையும், பாகிஸ்தான் நாட்டினரையும் விரட்டுவோம். அதே நேரத்தில் டிஆர்எஸ், எய்ஐஎம் ஆகியவை பாகிஸ்தானியர்களின், ரோஹிங்கியாக்களின் சட்ட விரோத வாக்குகள் மூலமாக நகராட்சி தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கின்றன.
உங்களுக்கு தேசபக்தி மிக்க பாஜக வேண்டுமா? இல்லை ஏஐஎம்ஐஎம், டிஆர்எஸ் போன்ற தேசவிரோத கட்சிகள் வேண்டுமா? என்றார். ஆளும்கட்சியின் பிரச்சாரத்துக்கு தலைமை தாங்கும் டிஆர்எஸ் செயல் தலைவரும், அமைச்சருமான கேடி ராமராவ் சில குறிப்பிட்ட வாக்குகளை குறி வைத்து பாஜக இயங்குகிறது என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: வறுமை, ஊழல்வாதிகள் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்களை அரங்கேற்றுபவர்களை தோற்கடியுங்கள். வாக்குகளுக்காக, அவர்கள் ஐதராபாத்தின் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்றார்.
சஞ்சய் குமாரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த ஏஐஎம்ஐஎம் தலைவரும், ஐதராபாத் எம்பியுமான அசாதுதின் ஓவைசி, எத்தனை பேர் ஐதரபாத்தில் சட்ட விரோத பாகிஸ்தானியர்கள், ரோஹிங்கியாக்கள் உள்ளனர் என்பதை 24 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கெடு விதித்தார். தீவிரவாதிகள், பாகிஸ்தானியர்கள் என்ற வார்த்தைகளை பயன்படுத்தாமல் வரும் 29ம் தேதி தேர்தலில் பாஜக பிரச்சாரம் செய்ய முடியுமா என்றும் கேள்வி எழுப்பினர்.