டில்லி,
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து தாக்கிய சர்ஜிக்கல் ஆபரேசன் குறித்து அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு மத்திய அரசு விளக்கம் அளித்தது.
பாகிஸ்தானில் புகுந்து நடத்தப்பட்ட ராணுவ தாக்குதல் குறித்து ராகுல் காந்திக்கு விளக்கம் மத்திய அரசு முதல்முறையாக ஏற்பாடு செய்தது.
கடந்த மாதம் 29–ந் தேதி, ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்ற பெயரில், இந்திய ராணுவம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது.
இந்த தாக்குதல் பற்றி எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் சந்தேகம் எழுப்பினர். இந்த தாக்குதல் பற்றிய வீடியோ ஆதாரங்களை மத்திய அரசிடம் ராணுவம் ஒப்படைத்தபோதிலும், அவை இன்னும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், இந்த தாக்குதல் குறித்து பேசிய ராகுல், ராணுவ வீரர்களின் தியாகத்தில் பிரதமர் மோடி அரசியல் நடத்துவதாக குற்றம் சாட்டி இருந்தார். அதற்காக பா.ஜனதா தரப்பில் அவருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ குறித்து இந்திய ராணுவமும், மத்திய அரசும் நேற்று முதல்முறையாக ராகுல் காந்திக்கு விளக்கம் அளித்தன.
வெளியுறவு தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில், ராகுல் காந்தியும், குழுவின் உறுப்பினர்களான எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.
ராணுவ தரப்பில் துணைத்தளபதி பிபின் ராவத்தும், மத்திய அரசு தரப்பில் வெளியுறவு செயலாளர் ஜெயசங்கரும் விளக்கம் அளித்தனர்.
எல்லை பாதுகாப்பு படை தலைவர் கே.கே.சர்மா, பாதுகாப்பு செயலாளர் மோகன் குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.
ஒரு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இக்கூட்டத்தின்போது, ராகுல் காந்தி கேள்வி எதுவும் எழுப்பவில்லை. கூட்டம் முடிந்து வெளியே வந்த அவர், பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசாமல் சென்று விட்டார்.