சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பான மீதான முறைகேடு புகார்கள் தொடர்பாக, அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதுபோல, துணைவேந்தர் சூரப்பா தனது தரப்பு நியாயங்களை விளக்கி ஆளுநருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்தஆணையம் புகார் குறித்து விசாரித்து வருகிறது.
இதுதொடர்பாக தமிழகஅரசுக்கு ஆளுநர் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், துணைவேந்தர் சூரப்பா தனது தரப்பு நியாயங்களை விளக்கி, பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து வெளியாகி உள்ள தகவலின்படி, சூரப்பா பணி நியமனத்தின்போதே எதிர்ப்பு இருந்ததாகவும், துணைவேந்தர் பதவிக்கு பல்வேறு தரப்பில் போட்டிகள் இருந்து வந்த நிலையில், ஆளுநர் கர்நாடகாவைச் சேர்ந்த சுரப்பாவை நியமனம் செய்தார். இது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக, சூரப்பா மீது அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்கள் உள்பட பல தரப்பிலும் எதிர்ப்பு தொடர்ந்து வந்தது. இதை சுட்டிக்காட்டி, ஆளுநருக்கு சூரப்பா கடிதம் எழுதி உள்ளதாகவும், அதில் தான் எந்தவொரு முறைகேட்டிலும் ஈடுபடவில்லை, எதற்காக என் மீது விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்பது கேள்வி எழுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அவர்மீதான புகாரை விசாரித்து வரும நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை குழுவினர், புகார் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி ஏற்கெனவே வழங்கிய ஆவணங்களை ஆய்வு செய்து வந்தனர். அதில் சில முக்கிய ஆவணங்கள் இல்லாததால், அதுகுறித்து விளக்கம் அளிக்கவும், பேராசிரியர் பணி நியமனம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் விசாரணை அலுவலகத்தில் பதிவாளர் கருணாமூர்த்தி 8-ம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, பதிவாளர் கருணாமூர்த்தி ஆவணங்களுடன் விசாரணை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். பேராசிரியர்கள், சில அலுவலர்களும் உடன் வந்தனர். பேராசிரியர் நியமனம், நிதி பங்கீடு, பல்கலைக்கழக வரவு செலவு கணக்குகள் அடங்கிய ஆவணங்களை பதிவாளர் வழங்கியதாக கூறப்படுகிறது.