டெல்லி: ’நாடு முழுவதும் தெரு நாய்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது, மாநில அரசு தெருநாய்களை  2 வாரங்களில்   கண்டறிந்து, 8 வாரங்களுக்குள்  இதை மேற்கொள்ள வேண்டும். அப்புறப்படுத்திய நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, கருத்தடை செய்து காப்பகத்தில் சேர்க்க வேண்டும். தெரு நாய்களைப் பிடித்த இடத்திலேயே மீண்டும் கொண்டுபோய் விடுவது, அதன் மொத்த நோக்கத்தையே சிதைத்து விடும்’’ எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாய் கடி வழக்குகள் “ஆபத்தான அளவில் அதிகரித்து வரும்” நிலையில், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், விளையாட்டு வளாகங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து தெருநாய்களை அகற்றவும், நாய்களை நியமிக்கப்பட்ட நாய் காப்பகங்களுக்கு அனுப்பவும் உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டது.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், ரயில்வே நிலையங்கள் ஆகிய இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்வி அஞ்சாரியா இந்த வழக்கை விசாரித்தனர். முன்னதாக, அரசு நிறுவனங்களின் வளாகங்களில் இருக்கும் தெரு நாய்களுக்கு உணவளிக்கும் வகையில், விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் அளிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

3 பகுதிகளாக பிரித்து வழங்கப்பட்ட உத்தரவு

வழக்கை விசாரித்த நீதிபதி சந்தீப் மேத்தா, ‘’உத்தரவு 3 பகுதிகளாக பிரித்து வழங்கப்படுகிறது. முதலாவது இணக்கம் பற்றியது. அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் அடுத்த உத்தரவிற்கு முன் விரிவான பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகளை சரிசெய்ய எடுக்கப்பட்ட தீர்வு நடவடிக்கைகளைக் குறிப்பிட வேண்டும். இந்த விவகாரத்தில் தாமதம் கூடாது. எந்தவொரு மெத்தனமும் தீவிரமாகப் பார்க்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளது.

சாலைகளில் இருந்து விலங்குகள் அகற்றப்பட வேண்டும்

இரண்டாவது ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளுடன் தொடர்புடையது. அனைத்து மாநிலங்களின் நோடல் அதிகாரிகளும் தேசிய நெடுஞ்சாலைகள் போன்றவற்றில் இருந்து தெரு விலங்குகளை அகற்றுவதை உறுதி செய்யும் உத்தரவுகள் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகின்றன.

கால்நடைகள் உட்பட நெடுஞ்சாலைகள்/ சாலைகள்/ விரைவுச் சாலைகளில் காணப்படும் அனைத்து விலங்குகளையும் உடனடியாக அகற்ற வேன்டும். கால்நடைகள் மற்றும் பிற விலங்குகளுக்கு தேவையான அனைத்து பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும்.

அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் இதை கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்.

8 வாரங்களுக்குள் மேற்கொள்ள உத்தரவு

இதுகுறித்து மேலும் உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், ‘’2 வாரங்களில் தெரு நாய்களைக் கண்டறிந்து, 8 வாரங்களுக்குள் மாநில அரசு இதை மேற்கொள்ள வேண்டும். அப்புறப்படுத்திய நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, கருத்தடை செய்து காப்பகத்தில் சேர்க்க வேண்டும். தெரு நாய்களைப் பிடித்த இடத்திலேயே மீண்டும் கொண்டுபோய் விடுவது, அதன் மொத்த நோக்கத்தையே சிதைத்து விடும்’’ எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தெரு நாய்கள் பிரச்சினை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தொடரப்பட்ட வழக்கில், இவ்வாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.