டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வர்மாவின் வீட்டில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி இரவு 11:35 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது வீட்டில் இருந்த கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான ரூபாய் மீட்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டார்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சல உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய இந்த குழு மார்ச் 25 ஆம் தேதி தனது விசாரணையைத் தொடங்கியது.
இதுதொடர்பான அறிக்கை மே 4ம் தேதி தலைமை நீதிபதி கன்னாவிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று விசாரணைக் குழு தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், விசாரணை அறிக்கை மீது நீதிபதி யஷ்வந்த் வர்மா அளித்த விளக்கத்துடன் அறிக்கையையும் சேர்த்து குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் இன்று அனுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது ஜனாதிபதி திரௌபதி முர்மு விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.