டெல்லி: குடியுரிமைச் சட்டம் பிரிவு 6ஏ செல்லும் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், சுந்திரேஷ், பார்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு பரபரப்பு  தீர்ப்பு அளித்தது.

ஜனவரி 1, 1966 க்கு முன்பு அசாமில் நுழைந்த புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கிய குடியுரிமைச் சட்டம், 1955 இன் பிரிவு 6A இன் அரசியலமைப்பு செல்லுபடியை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

குடியுரிமைச் சட்டம் பிரிவு 6ஏ செல்லும்  என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. ‘அசாமில் குடியேற்றத்துக்கு அங்கீகாரம் தரும் 6ஏ சட்டப்பிரிவு செல்லும்’ என நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

ஜனவரி 1, 1966 க்கு முன் அசாமில் நுழைந்த புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கிய குடியுரிமைச் சட்டம், 1955 இன் பிரிவு 6A – அரசியலமைப்பிற்கு உட்பட்டதா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் ஆய்வு செய்தது. இந்த வழக்கில் இன்று அரசியல் சாசன பெஞ்ச் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.

முன்னதாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது, அப்போதைய பிரதமர் மறைந்த ல் ராஜீவ் காந்தி அரசுக்கும் அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கத்துக்கும் இடையே அஸ்ஸாம் ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு இந்த விதி சட்டத்தில் சேர்க்கப்பட்டது. பங்களாதேஷ் குடியேற்றவாசிகள் அஸ்ஸாமிற்குள் நுழைவதற்கு எதிராக ஆறு ஆண்டுகளாக நீடித்த போராட்டத்தின் உச்சக்கட்டமாக இந்த ஒப்பந்தம் அமைந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அது நிலுவையில் இருந்து வந்தது.

இதற்கிடையில், மத்தியல் மோடி தலைமையிலான பாஜக அரசு, கடந்த 2019ம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி,  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து, நம் நாட்டுக்குள் அகதிகளாக வந்த குறிப்பிட்ட சில பிரிவினருக்கு, குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா அமல் செய்யப்பட்டது.   அதன்படி,  குறிப்பிட்ட நாடுகளில் சிறுபான்மையினராக இருந்த ஹிந்து, சீக்கியர், ஜெயின், புத்த, பார்சி மற்றும் கிறிஸ்துவ மதத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படும் வகையில் சட்ட திருத்தம் இருந்தது.  அதுபோல, 1966ம் ஆண்டு முதல் 19971ம் ஆண்டுக்கு இடையே வங்கதேசத்தில் இருந்து வந்து அசாமில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. இதை எதிர்த்தும், குடியுரிமைச் சட்டத்தின் 1955ன் பரிவு 6ஏவை எதிர்த்தும்  உச்சநீதிமன்றத்தில் மேலும் பல வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது.  இதுதொடர்பாக மனுதாரர்களில்  அஸ்ஸாம் சன்மிலிதா மகாசங்க மற்றும் பலர் அசாமில் குடியுரிமைக்கு வேறுபட்ட கட்-ஆஃப் தேதியை நிர்ணயிப்பது “பாரபட்சமானது, தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது” என்று கூறினார். மேலும்,  மாநிலத்தில் மக்கள்தொகையை மாற்றுவது அரசியலமைப்பின் 29 வது பிரிவின் கீழ் பழங்குடி அசாமிய மக்களின் கலாச்சாரத்தை பாதுகாக்கும் உரிமைகளை பாதிக்கும் என்றும்  தெரிவிக்கப்பட்டது.

அதுபோல,  சிட்டிசன்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் உட்பட மற்ற பிரதிவாதிகள், பிரிவு 6A நீக்கப்பட்டால், 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியுரிமை உரிமைகளை அனுபவித்து வந்த பிறகு, ஏராளமான குடியிருப்பாளர்கள் “நிலையற்றவர்களாக” மாற்றப்படுவார்கள் என்று வாதிட்டனர்.

மத்தியஅரசும்,   “குடியுரிமையைப் பெறுதல் மற்றும் முடித்தல் மற்றும் குடியுரிமை தொடர்பான பிற விஷயங்கள் தொடர்பாக எந்தவொரு ஏற்பாடும் செய்ய” பாராளுமன்றத்திற்கு அதிகாரம்  உள்ளது என்றும், அதற்கு அதிகாரம்  வழங்கும் அரசியலமைப்பின் 11வது பிரிவை யாரும் கேள்வி எழுப்ப முடியாது என்று மத்தியஅரசு கூறியது.

இந்த நிலையில், வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைகள் முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள், தங்களது, தீர்ப்பில், ‘அசாமில் குடியேற்றத்துக்கு அங்கீகாரம் தரும் 6ஏ சட்டப்பிரிவு செல்லும்’ என தீர்ப்பு அளித்தனர். ஒருவர் மட்டும் மாறுபட்ட தீர்ப்பு அளித்தார்.  ஆனால், 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்கியதால்,  குடியுரிமைச் சட்டம் பிரிவு 6ஏ செல்லும் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் அசாமில் 1966ம் ஆண்டு முதல் 1971 வரை குடியேறியவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.