சென்னை :
காவிரி விவகாரத்தை மேலும் மேலும் தாமதப்படுத்தி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருப்பது, தமிழக விவசாயி களை தற்கொலைக்கு தூண்டுவதுபோல உள்ளது என்று தென்னிந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
காவிரி வழக்கில் உச்சநீதி மன்றம் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று மேலும் 6 நாட்கள் அவகாசம் கொடுத்து வழக்கின் விசாரணையை வரும் 14ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் விவசாயிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது,
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு சதி செய்கிறது என்று குற்றம் சாட்டினார். கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே இந்த உத்தரவு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
காவிரி வழக்கின் ஒவ்வொரு முறையின்போதும் உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் தமிழகத்திற்கு எதிரான போக்கையை கடைபிடித்து வருகின்றன. தற்போது காவிரி விவகாரத்தை மேலும் 6 நாள் தாமதப்படுத்தி இருப்பது கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்தே செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதுபோன்ற தீர்ப்பால் தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள் என்றும், ஏற்கனவே மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் தமிழகம் நமது கண்முன்னே பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.