மும்பை:

காராஷ்டிரா பாஜக பதவி ஏற்புக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட  அவசர வழக்கு இன்றுகாலை 11.30 மணிக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிசை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவை எதிர்த்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு இன்று காலை 11.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகாராஷ்ட்ராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், . திடீர் திருப்பமாக,  நேற்று காலையிலேயே அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அகற்றப்பட்டு, பாஜக கூட்டணி பதவி ஏற்றது. ஆளுநரின் அழைப்பின் பேரில் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று காலை முதலமைச்சராக பதவியேற்றார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் அஜித்பவார் பதவியேற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, சரத்பவார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். பின்னர் உத்தவ் தாக்கரேயும் சரத் பவாரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். பாஜகவுடன் அஜித் பவார் ஆட்சியில் பங்கேற்றது கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று சரத்பவார் அறிவித்தார்.

அஜித் பவார் பதவியேற்பின்போது தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் ராஜ்பவனுக்கு சென்றுள்ளனர். அவர்களில் ஏழு பேரை சிவசேனா உதவியுடன் உதவியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மீட்டுவந்தனர். எம்.எல்.ஏக்கள் சிலர் டெல்லி செல்ல விமான நிலையம் சென்றபோது சிவசேனா கட்சியினர் அவர்களுடன் பேச்சு நடத்தி திரும்ப அழைத்து வந்தனர்.

அதன்பின் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின் அவசரக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து அஜித் பவார் நீக்கப்பட்டார்.

கட்சியின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் 54 பேரில் 49 எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்றதாகவும், 5 பேர் மட்டுமே வரவில்லை என்றும் செய்தியாளர்களிடம் சரத்பவார் தெரிவித்தார். பின்னர் அவர்கள் அனைவரும்  நட்சத்திர ஓட்டலுக்கு நேற்று இரவு அழைத்துச் செல்லப்பட்டு அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். சட்டப்பேரவையில் தேவேந்திர பட்னாவிஸ் அரசு  நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக  கூடும் வரையில்அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் எனறு கூறப்படுகிறது.

இதற்கிடையில், பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று இரவு அவசர மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உடனே விசாரித்து, பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், இரவு விசாரிக்க மறுத்த உச்சநீதி மன்றம்,  இன்று காலை 11.30 மணிக்கு விசாரிப்பதாக கூறியது. இந்த வழக்கு இன்று 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.