புதுடெல்லி :

ரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (Adjusted Gross Revenue – AGR ஏஜிஆர்) தொடர்பான நிலுவைத் தொகையை செலுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தொலை தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த நிறுவனங்களுடன் இந்திய தொலை தொடர்புத் துறை (DoT) செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயின் (AGR) ஒரு பங்கை தொலை தொடர்புத் துறைக்கு செலுத்தவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏ.ஜி.ஆர் (AGR) என்பதை வரையறுக்கக் கோரி வோடபோன் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடுத்த வழக்கில் அரசு தொலை தொடர்புத் துறை நிர்ணயித்தபடி அதற்குச் செலுத்தவேண்டிய தொகையை இந்த நிறுவனங்கள் செலுத்தியாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

15 நிறுவனங்கள் செலுத்த வேண்டிய மொத்த தொகையான 1 லட்சத்து 47 ஆயிரம் கோடியை தொலைத்தொடர்புத் துறைக்கு செலுத்தியாக வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது, இதில் பல நிறுவனங்கள் தங்கள் சேவையை பல ஆண்டுகளுக்கு முன் நிறுத்திவிட்டனர்.

இந்தத் தீர்ப்பையடுத்து ஏர்டெல் நிறுவனம் 25,976 கோடி ரூபாயும் வோடபோன் ஐடியா நிறுவனம் 50,399 கோடி ரூபாயும் அரசுக்கு செலுத்தவேண்டியுள்ளது. இந்தப் பெரும் தொகையைச் செலுத்த உச்சநீதிமன்றம் இவர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ள காலக்கெடுவின் படி முதல் தவணையாக இந்த நிறுவனங்கள் செலுத்தவேண்டிய தொகையில் 10 சதவீத தொகையை 2021 மார்ச் மாதத்திற்குள் கட்டவேண்டும் என்றும், மொத்தத் தொகையையும் 10 ஆண்டுகளில் தவணை முறையில் செலுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தவணையை செலுத்த தவறும் நிறுவனங்கள் அதற்கான வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டி வரும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளது.

திவாலான நிறுவனங்களிடம் இருந்து வரவேண்டிய தொகை மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றைகளை மறு ஏலம் விடுவது குறித்து தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் (NCLT) முடிவெடுக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

திவாலான நிறுவனங்களில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் ஒன்று என்பதும் இந்நிறுவனம் அரசுக்கு 25,194 கோடி ரூபாய் செலுத்தவேண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.