சென்னை; எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கின் சிபிஐ விசாரணையை ரத்து செய்த உச்சநீதிமன்றம், மாநில லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் விசாரணையின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான  எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வந்தது.

2018ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்தார். இதே போல அறப்போர் இயக்கமும் புகார் கூறியிருந்தது. அவரது மனுவில்,   ஒட்டன்சத்திரம் – தாராபுரம்- அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு என்பது 713.34 கோடியாக உள்ள நிலையில் அந்த திட்டத்திற்கான நிதி 1,515 கோடியாக உயர்த்தப்பட்டு டெண்டர் வழங்கப்பட்டதாகவும்,  இந்த பணிக்கான ஒப்பந்தம் முதலமைச்சராக இருந்த  எடப்பாடி கே.பழனிசாமி உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி – செங்கோட்டை கொல்லம் நான்கு வழிச்சாலையை விரிவுபடுத்தி, பலப்படுத்தும் 720 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக  இதில், ₹4800 கோடி டெண்டர் முறைகேடு  நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

 இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை வெளிப்படை தன்மையுடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்த நிலையில், இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில்  சி.பி.ஐ. விசாரணை உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவிட்டு, சென்னை உயர்நீதிமன்றமே மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி உள்ளது.