உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளியின் மகன் அதுல் IIT தன்பாத்தில் சேர கடைசி நிமிடத்தில் கட்டணம் செலுத்த முடியாமல் போன வழக்கில் உச்ச நீதிமன்றம் மகத்தான தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஐஐடியில் அட்மிஷன் பெறுவதற்காக கடினமாக உழைத்துள்ள அதுல் ரூ. 17,500 ஐ கையில் வைத்திருந்தால் ஏன் கட்டணம் செலுத்தாமல் இருக்கப்போகிறார் ? என்று கேள்வியெழுப்பிய நீதிபதி, அதுலின் கடின உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தது மட்டுமல்லாமல், தனது தீர்ப்பின் மூலம் மனித அம்சங்களின் மேன்மையை நிலைநிறுத்தவும் பாடுபட்டார்.
முசாபர்நகர் மாவட்டம் கட்டௌலி சட்டமன்ற தொகுதியின் டிடோடா கிராமத்தில் வசிப்பவர் அதுல் குமார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையானது.
படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டிவந்த அதுல் தனது கடுமையான உழைப்பு மற்றும் பயிற்சியின் மூலம் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்று, மேலும் அவரது தரவரிசைப்படி, ஐஐடி தன்பாத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடப் பிரிவில் இடம் பெற்றார்.
சேர்க்கைக்கான கடைசி தேதி ஜூன் 24 மாலை 5 மணி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான கட்டணம் ரூ. 17,500 இல்லாமல் அதுலின் தந்தை திண்டாடினார்.
மகனின் படிப்பிற்காக அந்த கிராமத்தில் உள்ள தனக்கு தெரிந்தவர்களிடம் உதவிகோரிய அவர் ஒருவழியாக பணத்தை திரட்டிய நிலையில் ஜூன் 24 மாலை 4:45 மணிக்கு ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த உள்நுழைந்தார்.
தனது விவரங்களை சரிபார்த்த அதுல் கட்டணம் செலுத்த முற்படும்போது நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி கட்டணத்தை அந்த கணினி ஏற்க மறுத்தது.
இதையடுத்து ஐஐடி நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பிய அதுல் தனக்கு இடம்தர வேண்டி போராடினார்.
ஆனால் அவரது கோரிக்கையை ஐஐடி நிர்வாகம் ஏற்க மறுத்ததை அடுத்து நீதி கேட்டு ஜார்கண்ட் சட்ட சேவை ஆணையத்தை நாடிய அவர் தொடர்ந்து சென்னை சட்ட சேவை ஆணையத்திலும் முறையிட்டார்.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் செப்டம்பர் 24ம் தேதி இந்த வழக்கில் விசாரணை நடந்து.
இதில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்காக கடினமாக உழைத்த சிறுவன் அதுல் தனது குடும்ப பொருளாதார சூழல் காரணமாக கடைசி நிமிடத்தில் கட்டணத்தை செலுத்த முயற்சி செய்த நிலையில் அது முடியாமல் போனது.
கட்டணத்தை செலுத்த அதுல் தொடர்ந்து முயற்சி செய்ததற்கான ஆதாரங்கள் அந்த கம்ப்யூட்டர் சர்வரில் உள்ளதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, “ரூ.17 ஆயிரம் இருந்தால் ஏன் கட்டணத்தை டெபாசிட் செய்ய மாட்டார்?” என்று கேள்வியெழுப்பினார்.
ரூ. 17000 இல்லை என்பதற்காக நாட்டில் எந்த குழந்தைக்கும் கல்வி மறுக்கப்படும் சூழல் ஏற்படக்கூடாது என்று கூறினார்.
மேலும், அதுலுக்கு ஒரு இடம் ஒதுக்கி கல்லூரியில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று ஐஐடி தன்பாத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.