டெல்லி:
நாடு முழுவதும் 41 நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 41 நிலக்கரி சுரங்கங்களை வர்த்தக சுரங்க பணிகளுக்கு ஏலம் விடும் நடைமுறையை பிரதமர் நரேந்திர மோடி ஜூன் மாதம் 18ந்தேதி (18/06/2020) டெல்லியில் இருந்தபடியே காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த நடவடிக்கையால் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் 33 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 70 ஆயிரம் பேருக்கு நேரடி யாகவும், 2.10 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்தியஅரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து ஜார்கண்ட் மாநில அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
மனுவில், மத்தியஅரசின் இத்தகையாக நடவடிக்கை காடு வளங்களையும் , பழங்குடியின கலாச் சாரத்தையும் அழித்துவிடும். மேலும் தற்போது இதன் மூலம் உரிய விலையும் கிடைக்காது எனவே மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளது.
இந்த மனுமீதான விசாரணை இன்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமை யிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடைபெற்றது.அதையடுத்து, மனு தொடர்பாக 4 வாரங்களில் மத்தியஅரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.