சென்னை: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து  தெரிவித்த எஸ்விசேகருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சரணடைய 4 வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

காமெடி நடிகரான எஸ்வி.சேகர் பாஜகவில் இருந்தபோது, பெண் பத்திரிகையாளர்கள குறித்து கூறிய கருத்து சர்ச்சையானது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த விசாரணை நீதிமன்றம், அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து எஸ்பி சேகர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும், நடிகர் எஸ்.விக்கு 2024 பிப்ரவரியில் விசாரணை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் ஒரு மாத சிறைத்தண்டனையில் தலையிட மறுத்துவிட்டது.

இதையடுத்து,  பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரத்தில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள 1 மாத சிறை தண்டனையை எதிர்த்து எஸ்.வி.சேகர்  உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பிரசன்னா.பி.வராலே முன்பு  விசாரணைக்கு வந்தது.

அப்போது எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், “இந்த விவகாரத்தில் வரும் ஏப்.2ஆம் தேதி வரை சரணடைய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு மனுவை முறையாக தாக்கல் செய்யும் வரை தான் சரணடைய விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

விசாரணையின்போது,  நீங்கள் யார்? என்ன பணி செய்கிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறிய எஸ்விசேகர் வழக்கறிஞர்,  எஸ்.வி.சேகர் ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், நடிகர், எழுத்தாளர் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கருத்து தெரிவித்த  நீதிபதிகள்,  பொது வாழ்க்கையில் இருப்பவர் பொறுப்புடன் செயல்பட வேண்டாமா?. நிதானத்துடன் செயல்பட்டிருக்க வேண்டாமா?. ஒரு தகவலை பகிர்வதற்கு முன்னர் அதனை சரியாக பார்த்திருக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு  எஸ்.வி.சேகர் தரப்பு வழக்கறிஞர்,  தவறாக தகவலை,  அப்படியே சமூக வலைதளத்தில் பகிர்ந்து விட்டேன். அதன் பின்னர் உடனடியாக நீக்கி விட்டேன் என கூறினார்.

எஸ்.வி.சேகர் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, அவர் சரணடைவதில் இருந்து இடைக்கால விளக்கு அளித்து உத்தரவிட்டார். 4 வார காலத்துக்கு சரணடை வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.