சென்னை:
தமிழக அரசால் சீல் வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிக்காக திறக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மனுவை உச்சநீதி மன்றம் மீண்டும் தள்ளுபடி செய்தது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தில் 13 பேர் காவல்துறை யினரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியான நிலையில், பிரச்சினை விசுவரூபம் எடுத்ததை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்து மூடியது.
இதை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு போட்டது. வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்சநீதி மன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ததுடன் ஆலையை திறக்கவும் தடை விதித்தது. மேலும், தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என ஆணையிட்டது.
அதைத்தொடர்ந்து வேதாந்தா நிறுவனம் சார்பில், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது. . இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் சத்திய நாரயணன், நிர்மல்குமார் அமர்வு விசாரித்து வந்தது. வழக்கில் ஆலை பராமரிக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் கோரியது.
ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அன்றைய தினம் நடைபெற்ற வாதங்களை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், வழக்கை ஏப்ரல் 23ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில்,ஸ்டெர்லைட் நிர்வாகம் மீண்டும் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில் பராமரிப்பு பணிக்காக ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.
ஆனால், உச்சநீதி மன்றம் வேதாந்தா கோரிக்கையை ஏற்க மறுத்து, வழக்கை தள்ளுபடி செய்தது.