டில்லி

பிரதமர் மோடியின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள ”பி எம் நரேந்திர மோடி” என்னும் திரைப்படத்தை வெளியிட தடை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

பிரதமர் மோடியின் வாழ்க்கை கதையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள பயொபிக் ”பி எம் நரேந்திர மோடி” என்னும் திரைப்படமாகும். நடிகர் விவேக் ஒபராய் இந்த திரைப்படத்தில் மோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று திரைக்கு வர உள்ளது.

தேர்தல் நேரத்தில் இந்த திரைப்படம் வெளியாகக் கூடாது எனவும் அது தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறிய செயல் எனவும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தேர்தல் ஆணையம் இந்த படம் திரையிடுவதை தடை செய்ய மறுத்தது.

அதை ஒட்டி மும்பை மற்றும் மத்திய பிரதேச உயர்நீதிமன்றங்களில் இந்த திரைப்படத்தை தடை செய்ய வழக்கு தொடரப்பட்டது.   இந்த படம் திரையிடுவதை தடை செய்ய உயர்நீதிமன்றங்கள் மறுத்ததை ஒட்டி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

நேற்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, “இந்த திரைப்படத்தின் 2 நிமிட டிரெய்லர் மட்டுமே வெளியாகி உள்ளது. அதை வைத்து படம் குறித்து எந்த முடிவுக்கும் வர முடியாது. அதனால் இந்த திரைப்படத்தை வெளியிட தடை செய்ய முடியாது” என தீர்ப்பளித்து அந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.