டெல்லி: நீட் யுஜி -2021 தேர்வை மறுசீரமைக்க அல்லது ஒத்திவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரும் மனுக்களை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அதுதொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் 12ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் பலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், இளநிலை மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு எதிரான (UG NEEt2020) மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் நடப்பாண்டுக்கான இளநிலை மருத்துவ (எம்பிபிஎஸ், பிடிஎஸ்) படிப்புகளுக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதித் தோவு (நீட் 2021) வரும் செப்டம்பா் மாதம் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக அதற்கான விண்ணப்பம், கடந்த ஜூலை 13 ஆம் தேதி மாலை 5 முதல் தொடங்கி ஆகஸ்டு 14ந்தியுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில், மற்ற படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வும் செப்டம்பர் 12ம் தேதியே நடைபெறுவதால், நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும் சிலர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்றும், சிலர் நடப்பாண்டு நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் உச்சநீதிமனற் நீதிபதி ஏஎம் கான்வில்கர், நீதிபதி ஹ்ரிஷிகேஷ் ராய் மற்றும் நீதிபதி சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்சில் விசாரிக்கப் பட்டது. அப்போது, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தேர்வில் தலையிட முடியாது என்று வாய்மொழியாக நீதிபதிகள் கூறினர்.

நீட் தேர்வு எழுத 16 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அந்த மாணவர்கள் இரவு பகல் பாராது தயாராகி வருகின்றனர். இந்த விவகாரம்,  ஒரு நீதிமன்றமாக நாம் எவ்வளவு தலையிட முடியும்? என்று கேள்வி எழுப்பியதுடன்,  எங்கள் தலையீடு  என்பது பல மாணவர்களுக்கு நாம் கஷ்டத்தையும் வலியையும் ஏற்படுத்துவதாகும் என்று தெரிவித்ததுடன், இந்த விஷயத்தில் மத்தியஅரசு, சொந்தமாக ஏதும், செய்ய விரும்பினால் அதை அவர்களே முடிவு செய்ய வேண்டும். எங்கள் மூலம் (நீதிமன்றம்) அரசுக்கு உத்தரவிட நிர்பந்திக்க  வேண்டாம் என்று நீதிபதிகள் வாய்வழியாகக் கூறினார்.

இப்போது நீட் தேர்வு அட்டவணையில் குறுக்கிடுவது என்பது, மாணவர்களின் மனதில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும். அதுபோன்ற சூழலை உருவாக்க  விரும்பவில்லை என்றும்,  வெறும் 1% மாணவர்கள் மட்டுமே இம்ப்ரொவிசேஷன் தேர்வுக்கு வருவார்கள், அவர்களுக்காக நீட் தேர்வு அட்டவனையை மாற்ற முடியாது என்று கூறியதுடன், நாடு முழுவதும் இந்த தேர்வை  16 லட்சம் பேர் எழுதும்  நிலையில், அதை ஒத்திவைக்க இயலாது என்று கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளனர்.