டெல்லி: 5மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகளைக்கொண்ட கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளத. அதன்படி, அலகாபாத், ராஜஸ்தான், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதியை நியமிக்க பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலிஜியம் அவ்வப்போது புதிய நீதிபதிகள், நீதிபதிகள் பதவி உயர்வு தொடர்பான பரிந்துரைகளை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வருகிறது. அதை ஆய்வு செய்யும் சட்ட அமைச்சகம், தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி அறிவிப்பு வெளியிடும்.
இந்த நிலையில், தற்போது 5 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்புர்வ பட்டியல் உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
அதன்படி, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி அருண் பன்சாலியை நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி விஜய் பிஷ்னோய் கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ஷீல் நாகு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர் சாரங்கி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.