டில்லி
அலகாபாத் நீதிமன்றம் மருத்துவர் கஃபீல்கான் விடுதலை செய்ததை எதிர்த்து உ பி அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏராளமான குழந்தைகள் மரணம் அடைந்தது தெரிந்ததே. அப்போது தனது சொந்த முயற்சியில் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்து பல குழந்தைகளின் உயிரை காத்தவர் மருத்துவர் கஃபீல் கான் ஆவார். அப்போது அவர் மீதே குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பிறகு அவர் வெளியே வந்தார்.
அதன்பிறகு 2019 அம் ஆண்டு டிசம்பர் மாதம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடந்தது. அதில் மருத்துவர் கஃபீல்கான் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசி அலிகார் நகர அமைதிக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை எதிர்த்து கஃபீல் கான் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். தன்னை விடுவிக்குமாறு கேட்டிருந்த மருத்துவர் கஃபீல் கானின் மனு மீதான விசாரணையின் போது இது குறித்து 15 நாட்களில் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அலகாபாத் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது. இதையொட்டி அலகாபாத் நீதிமன்றம் கஃபீல் கானை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டது.
மேலும் அவரை தடுப்புக் காவலில் வைத்திருப்பது சட்ட விரோதம் என விமர்சித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அவருடைய உரை அலிகார் நகரத்தின் அமைதியை அச்சுறுத்தவில்லை எனவும் குறிப்பிட்டது.
உத்தரப்பிரதேச அரசு கஃபீல் கானில் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வின் கீழ் நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது அமர்வு அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு நியாயமானது எனக் கூறி அதில் தாங்கள் தலையிட மாட்டோம் என அறிவித்து உ பி அரசு மனுவைத் தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பு குறித்து மருத்துவர் கஃபீல் கான், “உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு நான் நன்றியைத் தெரிவிக்கிறேன்.. நான் யாருக்கும் எங்கும் அநீதி நடந்தாலும் தொடர்ந்து குரல் எழுப்புவேன்” என தெரிவித்துள்ளார்.