டெல்லி: தெலங்கானாவின் கஞ்சா கச்சிபௌலி வனப்பகுதியில் மரங்கள் வெட்ட தடை விதித்த உச்சநீதிமன்றம் மாநில அரசின் நடவடிக்கையை கடுமை யாக விமர்சித்தது.
தெலங்கானாவின் கஞ்சா கச்சிபௌலியில் உள்ள வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், மரங்களை வெட்ட தடை விதித்தது. நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஏலம் விடுவதாகவும், அதில் ஐடி உட்கட்டமைப்பு அமைப்பதாகவும் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசு அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, இந்த இடத்தில் உள்ள மரங்களை வெட்ட இரவோடு இரவாக ஏராளமான புல்டோசர்களை வனப்பகுதிக்குள் இறக்கி மரங்களை வெட்டித்தள்ளியது. இதனால், அந்த வனப்பகுதில் வசித்து வந்த பறவைகள், மிருகங்கள் போக்கிடம் இன்றி கூக்குரல் எழுப்பியபடி, அங்கிருந்து வெளியேறின. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மாநில முதல்வரான ரேவந்த் ரெட்டியின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெலுங்கானா மாநில அரசின் நடவடிக்கை குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்த செயல் அரக்கத்தனமானது என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. பிஆர்எஸ் கட்சி உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய மத்திய அமைச்சர், கச்சிபவுலி வனப்பகுதியில் மரங்களை வெட்டுவது குறித்து தெலுங்கானாவிடம் மத்திய அரசு அறிக்கை கோரி இருப்பதாகவும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் வியாழக்கிழமை தெரிவித்தார் .
மேலும், “ஹைதராபாத்தில், மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. இரவு இருட்டில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அளவுக்கு, அந்த மரங்கள் மற்றும் பசுமையான பகுதிகளுடன் மாநில அரசுக்கு என்ன மாதிரியான பகை இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றார். “மாநில அரசு 400க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி வீழ்த்தியது. மயில் போன்ற காட்டு இனங்கள் விரட்டியடிக்கப்படுகின்றன, அதை நீங்கள் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் காணலாம்,” என்று அவர் கூறினார். “நாங்கள் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், மேலும் உண்மை அறிக்கையையும் கோரியுள்ளோம். இந்த விஷயத்தில் நாங்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் தானாகவே வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தியது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள காஞ்சா கச்சிபவுலி வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு உச்சநீதிமனற் நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வில் விசாரிக்கப்பட்ட போது, “இது மிகவும் தீவிரமான விஷயம். சட்டத்தை உங்கள் கையில் எடுக்க முடியாது என மாநில காங்கிரஸ் அரசை கடுமையாக சாடியதுடன், இந்த விஷயத்தில் மறு உத்தரவுகள் வரும் வரை, ஏற்கனவே இருக்கும் மரங்களைப் பாதுகாப்பதைத் தவிர, அந்த இடத்தில் எந்தவிதமான நடவடிக்கையும் இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.
இந்த விவகாரத்துக்கு தெலங்கானா தலைமைச் செயலாளர் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் உத்தரவுகள் உண்மையான உணர்வுடன் பின்பற்றப்படாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெஞ்ச் மேலும் கூறியது.
விசாரணையின்போது, ‘ வனப்பகுதியில் இருந்து மரங்களை அகற்றுவது உட்பட வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான “அவசரம்” என்ன என்பது உட்பட நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு தலைமைச் செயலாளரிடம் கேட்டுக் கொண்டது.
இத்தகைய நடவடிக்கைக்கு மாநில அரசு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு சான்றிதழ்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் இருந்து தேவையான அனுமதி பெற்றதா இல்லையா என்பதை பிரமாணப் பத்திரத்தில் விளக்குமாறு தலைமைச் செயலாளரிடம் பெஞ்ச் கேட்டுக் கொண்டது.
வெட்டப்பட்ட மரங்கள் தொடர்பாக மாநில அரசு என்ன செய்துள்ளது என்பதையும் உச்ச நீதிமன்றம் அறிய விரும்பியது. மேலும், ஏப்ரல் 16-ம் தேதிக்குள் அந்த இடத்திற்கு சென்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவை (CEC) கேட்டுக் கொண்டது.
அந்த இடத்திற்கு சென்று தெலங்கானா உயர் நீதிமன்ற பதிவாளர் (நீதித்துறை) சமர்ப்பித்த அறிக்கையை ஆய்வு செய்த பெஞ்ச், வனப்பகுதியில் பெரிய வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிக்கை வெளிப்படுத்துகிறது என்று கூறியது. “பதிவாளர் (நீதித்துறை) அறிக்கை மற்றும் அவர் அனுப்பிய புகைப்படங்கள் ஒரு ஆபத்தான படத்தைக் காட்டுகின்றன.
சுமார் 100 ஏக்கர் பரப்பளவை அழிக்க ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன, ஜேசிபி போன்று பெரிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த பகுதியில் சில மயில்கள், மான்கள் மற்றும் பறவைகள் காணப்பட்டதாகவும் அறிக்கை கண்டறிந்துள்ளது. இது வனவிலங்குகளால் வசிக்கும் காடு இருந்ததை முதன்மையாகக் குறிக்கிறது,” என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
வார இறுதி நாட்களில் அதிக அளவில் மரங்கள் வெட்டப்பட்டதாக வழக்கறிஞர் பரமேஸ்வர் பெஞ்சிடம் தெரிவித்தார். நீண்ட விடுமுறையை சாதகமாக பயன்படுத்தி அதிகாரிகள் மரங்களை வெட்டுவதில் அவசரம் காட்டியதாக செய்தி அறிக்கைகள் காட்டுவதாக நீதிபதி கவாய் கூறினார்.
மேலும் இந்த வனப்பகுதி எட்டு வகையான அட்டவணைப்படுத்தப்பட்ட விலங்குகளின் வீடாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பெஞ்ச் கூறியது. இந்த நிலம் ஹைதராபாத்தின் ஐடி மையத்தில் அமைந்துள்ளது மற்றும் பசுமை போர்வை மற்றும் வனவிலங்குகளுக்கான இடத்தை இழப்பது குறித்து மக்கள் கவலை தெரிவித்ததால் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. நிலத்தை ஏலம் விடுவதற்கு ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் மற்றும் நிலத்தை பல்கலைக்கழகத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது