டில்லி:

ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்ற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்றும் நடவடிக்கையை நவம்பர் 21ம் தேதி வரை மேற்கொள்ளக் கூடாது என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மியான்மரில் இருந்து தப்பி வந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள 40 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்றப் போவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரோஹிங்யா சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ரோஹிங்யா முஸ்லிம்களில் சிலருக்கு பயங்கரவாத இயக்கங்களோடு தொடர்பிருக்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கை மீண்டும் விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, நாட்டின் பாதுகாப்புக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, அகதிகளின் மனித உரிமை சார்ந்த நலனுக்கும் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்ற கூடாது என உத்தரவிட்டனர்