டில்லி:
வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. திடீரென முதல்-மந்திரி நபம் துகிக்கு எதிராக துணை சபாநாயகர் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் 11 உறுப்பினர்களை கொண்ட பாரதீய ஜனதாவுடன் கை கோர்த்தனர்.
இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்ததற்கு மாறாக, ஒரு மாதம் முன்கூட்டியே கவர்னர் ராஜ்கோவா சட்டசபையை கூட்டினார். துணை சபாநாயகர் தலைமையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16-ந் தேதி நடந்த கூட்டத்தில், சபாநாயகரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர்.
இதையடுத்து, கவர்னர் மற்றும் துணை சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு எதிராக கவுகாத்தி ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதனால் அங்கு ஒரு அரசியல் நெருக்கடி நிலவியது.
இந்த நிலையில், கவர்னரின் பரிந்துரைப்படி அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய மந்திரிசபை சிபாரிசு செய்தது. அதற்கு சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. “அருணாசல பிரதேச சட்டசபையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ம் தேதி நிலவிய சூழல் தொடர வேண்டும்” என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி ஏற்படுகிறது.
ஏற்கெனவே உத்ரகாண்ட் மாநிலத்திலும் கொல்லைப்புறம் வழியாக ஆட்சியமைக்க பாஜக முயன்றதும் பிறகு நீதிமன்ற தலையீட்டின் பேரில் அம் முயற்சி பலிக்காமல் போனதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தின் கவர்னர்களை தனக்கு சாதகமாக செயல்பட வைத்து, ஆட்சியைக் கைப்பற்றும் பாஜகவின் நடவடிக்கைகளுக்கு இந்த தீர்ப்பு சரியான சாட்டையடியாக அமைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.