$1.6 பில்லியன் (ரூ. 14275 கோடி) வங்கி மோசடியில் தொடர்புடைய சகோதரர்களான நிதின் மற்றும் சேதன் சந்தேசரா, தங்களின் நிலுவைத் தொகையின் மூன்றில் ஒரு பங்கு $570 மில்லியன் (ரூ. 5085 கோடி) செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதற்குப் பதிலாக, அவர்களுக்கு எதிரான அனைத்து குற்றவியல் வழக்குகளையும் ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்துள்ளது.

அல்பேனியா பாஸ்போர்ட் மூலம் 2017ம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பியோடிய சகோதரர்களான நிதின்–சேதன் சந்தேசரா ஆகியோர் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய சமரசத்துக்கு முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், டிசம்பர் 17க்குள் இந்தத் தொகையை செலுத்த வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
இந்த இருவரும் 2018 சட்டத்தின் கீழ் “தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள்” பட்டியலில் உள்ள 14 பேரில் ஒருவர். இதில் விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்றவர்களும் உள்ளனர்.

சந்தேசரா சகோதரர்கள் நைஜீரியாவில் இருக்கும் ஸ்டெர்லிங் ஆயில் & எரிசக்தி நிறுவனத்தை சொந்தமாக வைத்துள்ளனர். இது நைஜீரிய கூட்டாட்சி வருவாயின் சுமார் 2.5% பங்களிப்பு வழங்குகிறது.
வெளிநாடுகளில் பொருளாதார குற்றங்களில் இருந்து விடுபட இதுபோன்ற பெரிய அபராதத்தை செலுத்தும் நடைமுறை உள்ளதாக தெரிவித்த சட்ட வல்லுநர்கள், உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் எதிர்காலத்தில் மற்ற பொருளாதார குற்றவாளிகளும் இதேபோன்ற சமரசங்களை முயற்சிக்கலாம் என்று கூறுகின்றனர்.
இதனால் வங்கிகள் தங்களின் முழு பணத்தையும் மீட்டெடுக்க முடியாமல் போகலாம் என்று சட்ட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.