2019-ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை அடுத்து மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயத் தேர்ச்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும் என்று எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த தேர்ச்சி முறையில் மாற்றம் செய்து மத்திய கல்வித் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டாய தேர்ச்சி ரத்து செய்யப்பட்டு, தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு இரண்டு மாதத்தில் துணை தேர்வு மூலம் தேர்ச்சி பெற மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை தேர்விலும் தோல்வியடையும் மாணவர்கள் மட்டுமே மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று புதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் தோல்வியும் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கூடுதல் வழிகாட்டுதலை வழங்குவார்கள். இருப்பினும், தொடக்கக் கல்வியை முடிக்கும் முன்னர் எந்த மாணவர்களும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டாய தேர்ச்சி ரத்து குறித்த இந்த புதிய விதியானது கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகள் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விஷயத்தில் ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த அணுகுமுறையை தேர்வு செய்யலாம் என்று மத்திய அரசு தெளிவாக விளக்கியுள்ளது.