நியூஸ்பாண்ட்:
“கட்சி அறிவித்த பிறகு பிறரைப்போல ஆவேச அறிக்கை, பரபர பேட்டி, மற்ற கட்சி மற்றும் தலைவர்கள் மீது தாக்கு.. என எதையும் செய்யவில்லை உச்ச ஸ்டார். ஆனால், மற்ற பலர் செய்யாத.. அல்லது அவர்களால் செய்ய முடியாத ஒன்றைச் செய்திருக்கிறார்” என்று சொல்லியபடியே வந்து அமர்ந்தார் நியூஸ்பாண்ட்.
“என்ன அது..” என்றோம் ஆர்வமாக.
“கட்சி நிதி வசூல் செய்வதுதான்..”
“ஓ..! நிதியில் அவர் எப்போதும் மிக மதி உடையவர்தான்” – நாம் சொல்ல.. ரசித்துச் சிரித்த நியூஸ்பாண்ட், “எவ்வளவு தெரியுமா” என்றார்.
“நீர்தான் சொல்ல வேண்டும்..”
“அறுபது கோடி ரூபாய்!”
“என்ன சொல்கிறீர்..” என்று ஆச்சரியத்துடன் நாம் கேட்க, “அமவுண்ட்டைச் சொன்னாலே சும்மா அதிருதில்லே.. “ என்று ஸ்டைலாகச் சொல்லி சிரித்தார் நியூஸ்பாண்ட்.
“அட.. நிஜமாத்தானா..”என்று நாம் கேட்க, நம்மை முறைத்த அவர், “என் காதுக்கு வரும் செய்திகளை உம்மிடம் சொல்கிறேன்.. அவை அப்படியே நடந்திருப்பதை பட்டியல் போடவா” என்றார்.
“உம் வாக்கை சந்தேகப்படுவோமா… கட்சி அறிவிப்பே சமீபத்தில்தானே நடந்தது… அதற்குள் அறுபது கோடியா என்கிற ஆச்சரியம்தான் எமக்கு. மேலே சொல்லும்” என்று நாம் சொல்ல..
“ கேளும்.. கட்சி துவங்குவது என்கிற முடிவுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே வந்துவிட்டார் அந்த ஸ்டார். உடனே அவர் செய்த வேலை பட்ஜெட் போட்டதுதான்.”
“ஓ…”
“ஆமாம்..ஆடிப்பாடி, பேசி சம்பாதித்தது ஏராளமாக இருந்தாலும், அதிலிருந்து ஒரு பைசாவும் எடுக்க மனைவியார் விடமாட்டார் என்பது அவருக்குத் தெரியும்.
அதே நேரம் காலம் காலமாக அரசியலில் பகுந்து விளையாடும் சில கட்சிகளோடு மோதவது என்றால் பெரும் நிதி வேண்டும். அதை துண்டேந்தி வசூலித்து ஆகாது. ஆகவே தனக்கு நெருக்கமான சிலரிடம் நிதி குறித்துத்தான் முதலில் பேசினார், ஸ்டார்!”
“ம்..”
“அவர்களில் சிலர் கலைத்துறையைச் சார்ந்தவர்கள். அவர்கள் மன மகிழ்ச்சியோடு ஆளுக்கு சில பல “சி”க்களை அளித்தனர். அவரது வெளி மாநில கலைத்துறை நண்பர் அதிகபட்சமாக எட்டு “சி” அளித்தாராம்.”
“அடேயப்பா..”
“அடுத்ததாக, ஸ்டாரின் பிரதிநிதியாக அவரது தொழிலதிபர் நண்பர், சில தொழிபதிபர்களை சந்தித்தித்தார். மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அந்தத் தொழிலதிபர்கள், தற்போது தங்கள் தொழிலில் உள்ள சில பல பிரச்சினைகளைக் கூறி வருந்தினாலும், அள்ளிக்கொடுக்க தயங்கவில்லை..”
“ஓ…”
“இன்னொரு பக்கம், ஸ்டாருக்கு நெருங்கிய மருத்துத்துறையில் கோலோச்சும் நண்பர் தனது மருத்து வட்டார நண்பர்களிடம் பேசியிருக்கிறார். அங்கும் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே கிடைத்திருக்கிறது..”
“அடடே..”
“மறைந்தவர் சிலையை சமீபத்தில் திறந்துவைத்தாரே.. அந்த விழாவை நடத்திய “குளிரானவர்” ஏழு சி ஏற்கெனவே கொடுத்திருக்கிறார். அதோடு, தன்னைப்போல் கல்வித் தொழிலில் ஈடுபட்டுள்ள அதிபர்களிடமும் பேசியிருக்கிறார்… ஸ்டார் ஆட்சிக்கு வந்துவிடுவார். பிறகு நமக்கிருக்கும் பிரச்சினைகள் எல்லாம் தீரும்.. என்று சொல்லிருக்கிறார். அன்றைய விழாவுக்கு இருபதுக்கும் மேற்பட்ட கல்வித்தந்தைகள் வந்திருந்தார்கள். கூட்டம் முடிந்தவுடன் அவர்களது ஆலோசனைக் கூட்டம் ஒன்றும் நடந்தது. மேலும் நிதி அளிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.”
“அவ்வளவு நம்பிக்கையா..”
“ஆமாம்.. திரை நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் தற்போது உச்சத்தின் ஆன்மிக அரசியலில் ஐக்கியமாகி இருக்கிறார் அல்லவா.. அவரும் இந்த நிதி வசூலில் முக்கிய பங்கு வகிக்கிறார். எல்லாம் சி-க்களில்தான்”
“இவ்வளவு வசூல் என்றால்…”
“புரிகிறது.. அதற்கெல்லாம் பிரச்சினை வராத அளவுக்கு கணக்கு வழக்குகள் தயாராகிக்கொண்டிருக்கிறது.. இதுவரை மொத்தம் அறுபதி சி வசூலாம். அத்தனைக்கும் சரியான கணக்குவழக்கு மெயின்டெய்ன் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஓய்வுபெற்ற வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் அதற்கு பொறுப்பேற்றிருக்கிறார்”
“ஓ…”
“ஆம்.. இடையில் கட்சி நடத்த நிதி வசூல் செய்யுங்கள் என்று ரசிகர்களுக்கு உத்தரவிடப்படும்”
“புரிகிறது” என்ற நாம், “இனியும் ரசிகர்கள் என்று சொல்லாதீரும். தொண்டர்கள் என்று சொல்லும்” என்று திருத்திய நாம், “இத்தனை பேர் சி-க்களாக கொட்டுகிறார்களே.. அந்த அளவுக்கு நம்பிக்கையா..” என்றோம்.
“ஏற்கெனவே கேட்டீர். மீண்டுமா” என்று நம்மை முறைத்த நியூஸ்பாண்ட், “கேளும். மத்திய தாமரைக் கட்சி, மற்றும் சில கட்சிகளுடன் கூட்டணி போட்டு அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிடுவார் என்றே, நிதி அளித்தவர்கள் பலரது நம்பிக்கை..”
“சரி, சரி..”
“நிதி அளித்த ஒருவரிடம் பேசினேன். காவிரிப்படுகை மாவட்டத்தில் சில கல்லூரிகளை நடத்தி வருகிறார்.
அவர், எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வராத.. வர வாய்ப்பே இல்லாத கட்சி ஒன்றுக்கு வருடத்திற்கு அரை சி அன்பளிக்கிறார். காரணம், அந்த கட்சியினரால் பிரச்சினை ஏதும் வரக்கூடாது என்பதற்காக. இப்படி “சீறிச் சீறி” பயமுறித்தி காசு பறிப்பவர்கள் இருக்கையில்.. அன்பாக கேட்கும் ஸ்டாருக்கு அளித்தால் என்ன… நாளை ஸ்டார் ஆட்சிக்கு வராவிட்டாலும் முக்கிய கட்சியாக வந்தாலே போதும்.. என்னிடம் இப்போது வசூலிக்கும் கட்சிக்கு விடை கொடுத்துவிடுவேன். ஸ்டார் காப்பாற்றுவார் என்றார் அவர்.. “
“அவரவர்க்கு அவரவர் நம்பிக்கை” என்ற நாம், “ஒரு கல்வித்தந்தையிடமே சீற்றத்தை காண்பித்து வருடத்துக்கு அரை சி வாங்கிவிடுவகிறார்கள் என்கிற இன்னொரு தகவலையும் சந்தடி சாக்கில் சொல்லிவிட்ட உமக்கு நன்றி” என்று சொல்லி நியூஸ்பாண்டை அனுப்பி வைத்தோம்.
அடுத்த சில நிமிடங்களில் ஒரு வாட்ஸ்அப் செய்தி அனுப்பினார் நியூஸ்பாண்ட்:
“முழுமையா அரசியலுக்கு வந்துவிட்டாலும், இன்னமும் தனது கலைத்துறை பயணத்தைத் தொடர்கிறார் அல்லவா.. அதற்குக் காரணம் குடும்ப குதர்க்கம்தான். அதாவது கடைசியாக ஒரு வசூலைக் கொடுத்துவிட்டு அரசியல் பக்கம் ஒதுங்குகங்கள் என்று வீட்டம்மா உத்தரவு போட.. அதை மீற முடியாத நிலை ஸ்டாருக்கு. அதோடு, என்னாலேயே நம்ப முடியாத அளவுக்கு சம்பாதித்துவிட்டேன்.. அதை அப்படியே குடும்பத்துக்குக் கொடுத்துவிட்டேன்.. இந்தப்படத்தோடு சரி. இனி என்னை தொந்தரவு செய்யக்கூடாது என்று வீட்டம்மாவிடம் உத்தரவும் வாங்கிவிட்டாராம் ஸ்டார்.
தேவையானால் இந்தத் தகவலையும் சேர்த்துக்கொள்ளும்” என்றது நியூஸ்பாண்ட் அனுப்பிய மெஸேஜ்.