நம் சாதாரணக் கண்களால் வானில் எவ்வளவு தூரம் தான் காண இயலும்? அது நாம் எந்தப் பொருளைக் காண்கின்றோமோ, அந்தப் பொருளின் பிரகாசத்தைப் பொருத்த விசயம். சரி தானே?

உதாரணமாக, நாம் கூர்ந்து கூர்ந்து பார்த்தும் இருப்பதிலேயே மிக மங்கலான நட்சத்திரம் ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரம் வேண்டுமானால் இருக்கலாம். அதற்கு அதிகம் இருக்க வாய்ப்பில்லை.

மேகங்களே இல்லாமல் இருந்து, அதே சமயத்தில் உங்களுக்கு வானில் எங்கே காண வேண்டும் என்று தெரிந்திருந்து பார்த்தால், ஆண்ட்ரோமீடா உடுமண்டலத்தையும், சிறு மேகம் போல் காணலாம். அது 2.5 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கின்றது.

ஆனால், கடந்த மார்ச் 19 அன்று பூட்ஸ் (Bootes) நட்சத்திரக் கொத்தின் (Constellation – a group of stars that are connected together to form a figure or picture.) வடபகுதியில் பார்த்தால், பைனாகுலரோ, தொலைநோக்கியோ கூட இல்லாமல், வெறுங்கண்ணிற்கே தெரிந்த ஒரு காமா வெடிப்பைக் கண்டிருக்கலாமாம்!

அந்த வெடிப்பு, மிக அதிக தூரமெல்லாம் இல்லை மக்களே! கிட்டத்தட்ட பிரபஞ்சத்தின் மொத்த அளவில் பாதியென்று நம்பப்படும் 7.5 பில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருந்து தெரிந்திருக்கின்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அதன் பிரகாசம் எத்தனை மகிமை வாய்ந்தது என்று!

சூப்பர் நோவாவையே சாதாவாக ஆக்கிய இந்த வெடிப்பு, சூப்பர் நோவா போல் 2.5 மில்லியன் மடங்கு பிரகாசமானதாக இருந்ததாம்.

GRB080319B என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த வெடிப்பு எக்ஸ் கதிர் படமாகவும், புற ஊதாக் கதிர் படமாகவும் இடது வலதாக இதோ கீழே!

 

இரத்தினகிரி சுப்பையா