திருவனந்தபுரம்: கேரளாவின் மிகப்பெரிய சன்னி முஸ்லீம் அமைப்பான சமஸ்தா கேரளா ஜாமியாத்துல் உலமா, மத்திய அரசின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த சட்டம் முஸ்லீம் ஆண்களை மட்டுமே வதைப்பதற்கு பயன்படும் என்றும், அச்சட்டத்தை அரசியல் சாசனத்திற்கு விரோதமானதாய் அறிவிக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த அமைப்பில் பல சன்னி முஸ்லீம் அறிஞர்கள் மற்றும் குருமார்கள் இடம்பெற்றுள்ளனர். மோடி அரசின் புதிய முத்தலாக் சட்டத்தின்படி, உடனடி தலாக் சொல்லும் ஒரு முஸ்லீம் கணவனை அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும். இந்த தண்டனை பிணையில் வெளிவர முடியாத தண்டனையாகும்.
உண்மையிலேயே முஸ்லீம் பெண்களை காப்பாற்ற நினைத்தால், தலாக் சொன்னதற்காக அவர்களின் கணவர்களை 3 ஆண்டுகள் சிறையில் தள்ளுவதை அறிவுள்ள எந்த நபரும் ஏற்கமாட்டார் என்று தெரிவித்துள்ளர் அந்த அமைப்பினர்.
கணவர்கள் சிறைக்கு சென்றுவிட்ட பின்னர், அந்தப் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது முஸ்லீம் ஆண்களை மட்டுமே குறிவைத்து கொண்டுவரப்பட்டுள்ளதால், இந்தப் புதிய சட்டத்தை அரசியல் சாசனத்திற்கு விரோதமானதாக அறிவிக்க வேண்டுமென அந்த அமைப்பின் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.