சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கும் மே 1 முதல் 15 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை உயர்வு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர்நீதி மன்ற பதிவாளரான நீதிபதி அல்லி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் பகல் வேளைகளில் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலை நீடிக்கிறது. மேலும் வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு முன் கூட்டியே முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தவிட்டு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், உயர்நீதிமன்றம் போல, குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனையேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோடை விடுமுறையொட்டி, வரும் மே 1ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் குடும்ப நல நீதிமன்ற அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.