சென்னை: தமிழ்நாட்டில்,  மகளிருக்கு இனி ஆண்டுதோறும் 2 ஆயிரம் ரூபாய் கோடைகால சிறப்புத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்து உள்ளார்.

சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், இந்த ஆண்டு தேர்தலை முன்னிட்டு, 3 மாத மகளிர் உரிமை என ரூ.3000 மொத்தமாக வழங்கியதுடன, மகளிருக்கு கோடை கால சிறப்பு தொகை என்ற பெயரில் ரூ.2000 சேர்த்து ரூ.5 ஆயிரமாக வழங்கினார். மேலும், மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிர மாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டில், மகளிருக்கு இனி ஆண்டுதோறும் 2 ஆயிரம் ரூபாய் கோடைகால சிறப்பு தொகை வழங்கப்படும்  என அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை அரசிடம் முன்வைத்தார். அப்போது, 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது, மகளிர் உரிமைத் தொகை தடுக்கப்பட்டதாக என்றும், நடைமுறையில் இருக்கும் திட்டத்தை யார் தடுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், நாங்களும் 2000 ரூபாய் தருவதாக அறிவித்துள்ள நிலையில், நாங்கள் எப்படி அதை தடுப்போம் என்றும் நிதியமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அதோடு, தேர்தல் உஷ்ணத்தின் காரணமாகத் தான் கோடைகால சிறப்புத் தொகையாக 2000 ரூபாய் கொடுத்துள்ளீர்கள், கடந்த 4 ஆண்டுகளாக அதை கொடுத்தீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் கீதா ஜீவன், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த கேள்வியை கேட்பதால், அதன் அடிப்படையில் பதில் கூறுவதாக தெரிவித்து, இனி ஒவ்வொரு வருடமும் இந்த 2000 ரூபாய் கோடைகால சிறப்புத் தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார். அமைச்சர் ஒருவர் கூறினால், அது அரசின் அறிவிப்பு போன்றது தான்.  அதனால், இதன் அடிப்படையில், திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் பட்சத்தில், இனி ஆண்டுதோறும் கோடை காலத்தில், மகளிருக்கு 2000 ரூபாய் சிறப்புத் தொகை வழங்கப்படும் என்பது உறுதியாகிறது.

இதேபோல், இது குறித்து பேசிய அமைச்சர் எ.வ. வேலு, ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் வருவதால், வெயில் காரணமாக மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். அதனால் தான், மகளிருக்கு கூடுதலாக கோடைகால சிறப்புத் தொகையாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

மேலும், இந்த கோடைகால சிறப்புத் தொகை கொடுத்தது, எங்கள் ஆட்சியின் கொள்கை முடிவு என்றும் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

[youtube-feed feed=1]